

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது.
விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், பகல் 12.30 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடந்தது. மதியம் 2 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர்.
தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்திற்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.