தமிழர் திருவிழாவில் உருவ பொம்மைகள் வழிபாடு

சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.
Toys
பொம்மைகள்
Published on

கருப்பசாமி

தமிழகத்தின் பல பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை உள்ளது. காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாகாளியம்மன், பட்டாளத்தம்மன் உள்ளிட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் கோவில் திருவிழாக்களில் வழிபாடு செய்வதற்காக உருவாக்கப்படுகிறது.

பக்தர்கள்

உருவ வழிபாடு தோன்றிய காலத்திலிருந்தே உருவார பொம்மைகளை நேர்த்தி கடனாக செலுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய், குதிரை என பலவகைப்பட்ட உருவங்களை உள்ளடக்கிய உருவார பொம்மைகளை கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

கோவில்

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு விருகல்பட்டியில் ஆண்டுதோறும் உருவார பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விருகல்பட்டியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சதீஷ்வரன் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களின் போது தெய்வங்களின் உருவங்கள் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு கோவில்களுக்கு வழிபடுவதற்காக உருவாக்கப்படுகிறது. இதற்காக கொழுமம், கோதவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் களிமண் பயன்படுத்தப்படுகிறது. மண்பாண்ட கலைஞர்களுக்கு அடையாள அட்டை இருந்தும் மண் எடுப்பதில் சிரமம் உள்ளதால் அருகில் உள்ள குளத்தில் இருந்து மண் எடுத்து உருவார பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.

மாட்டு பொங்கல்

ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கலன்று நடைபெறும் தமிழர் திருநாள் திருவிழாவில் கிராமப்புறங்களில் இருந்து வரும் பக்தர்கள் கன்றுடன் பசுமாடு இருக்கும் உருவாரபொம்மைகளை வாங்கி வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. டெண்டர் முறையை தவிர்த்து மண்பாண்டக் கலைஞர்கள் கோவிலில் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com