சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

27-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது. 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா  20-ந்தேதி தொடங்குகிறது
Published on

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடி யேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது.

30-ந் தேதி (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழா வுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com