சுசீந்திரம் கோவிலில் சப்தா வர்ண நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.இன்று காலையில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
சுசீந்திரத்தில் நடந்த சப்தாவர்ணம் நிகழ்ச்சி
சுசீந்திரத்தில் நடந்த சப்தாவர்ணம் நிகழ்ச்சி
Published on

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் வாகன பவனியும், ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி களும் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டினரும் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து இரவு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும் அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் மருங்கூர் முருகபெருமான், கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசாமி ஆகியோர் எதிரே காட்சியளித்தனர். அப்போது அனைத்து தெய்வங்களுக்கும் தீபாராதனை நடந்தது. இரு முருகப்பெருமானும் விநாயகரும் தாணுமாலயசாமியை வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னும் அசைந்து அசைந்து செல்லுவதும் பின்னர் திரும்புவதுமாக பலமுறை நடந்தது.

இதைத் தொடர்ந்து பெண்கள் குலவையிட்டு மங்கள ஒலி எழுப்பி மேளதாளங்கள் முழங்க 3 வாகனங்களில் இருந்த சாமிகளும் கோவிலை சென்ற டைந்தனர். சப்தாவர்ணம் நிகழ்ச்சியை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.அய்யப்பப் பக்தர்களும் ஏராளமானோர் கோவிலில் குவிந்திருந்தனர். இதனால் இரவும் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

சப்தாவர்ணம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பெரும்பாலான பக்தர்கள் கோவிலிலேயே தங்கினார்கள். இதைத் தொடர்ந்து இன்று காலையில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com