பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும் பங்குனி சோமவார ஏகாதசி வழிபாடு

ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன
பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும் பங்குனி சோமவார ஏகாதசி வழிபாடு
Published on

மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் மிகவும் விசேஷம். இந்த ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்பார்கள். அந்த வகையில் பங்குனி சோமவார சர்வ ஏகாதசி நாள் நாளை (திங்கட்கிழமை) வருகிறது. சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி வருவது கூடுதல் சிறப்பம்சம்.

இது விஷ்ணு மற்றும் சிவ வழிபாட்டிற்கு உகந்த மிக விசேஷமான நாளாகும். இந்த நாளில் விரதம் இருப்பது பாவங்களைப் போக்கி, செல்வம், ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைத் தரும். சோமவார ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும். ஏகாதசி என்பது அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இருந்து 11வது நாள். 10 நாட்கள் உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க 11-வது நாள் அதற்கு ஓய்வு தரும் விதமாக மேற்கொள்ளப்படும் விரதமே ஏகாதசி விரதம்.

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தம் மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகளை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவைப்படும்போது மட்டும் தண்ணீர் குடிக்கலாம்.

அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை கடைபிடிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது. ஏகாதசி நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ர நாமத்தையோ உச்சரித்து பெருமாளை வழிபடலாம்.

பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம். மேலும் பொருளாதார முன்னேற்றம் அபாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ராவணன் சீதையை சிறை எடுத்து சென்று விட்டார். எப்படி மீட்டு வருவது என்று ராமர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்பொழுது அங்கே வந்த ஒரு முனிவர் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூற, அதன்படி விரதம் இருந்து தான் சீதையை ராமர் மீட்டு வந்தார் என்று ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

இந்த ஏகாதசி தினத்தில் 7 தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகாவிஷ்ணுவை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இந்த ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும்.

இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால், நோயற்ற உடல், குறைவற்ற செல்வம், நல்ல சந்ததி மற்றும் நிலைத்த புகழ் ஆகியவற்றை இறைவன் அருள்வார். மேலும், ஏகாதசி உபவாசம் கோபம், குரோதம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை அகற்றி, மனதை தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.

விரதம் இருப்பவர்கள் மாலையில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, பெருமாளை வணங்குவது, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும். நம் பாவங்களையெல்லாம் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தந்தருள்வார் பெருமாள் என்கின்றனர் பக்தர்கள். சர்வ ஏகாதசி முடிந்து மறுநாள் சித்திரை மாதம் ஆரம்பிப்பதால் லட்சுமி காலம் தொடங்க போகிறது என்று அர்த்தம்.

அதாவது நாராயணரோட அருள் ரொம்ப பரிபூரணமாக இருக்கிற நாள். இந்த மாதம் பண கஷ்டங்கள் இருப்பவர்கள், மன அழுத்தம், உறவில் சிக்கல்கள் இருப்பவர்கள் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள், வாழ்க்கையில் முன்னேற்றத்தை தேடி போறவங்க இவங்க எல்லாருக்குமே ஒரு முன்னேற்றமான மாதமாக அமைய சர்வ ஏகாதசி, சோமவார சிவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com