என் மலர்tooltip icon

    வழிபாடு

    பச்சை திருமேனியாக காட்சி தரும் பச்சைவாழியம்மன்
    X

    பச்சை திருமேனியாக காட்சி தரும் பச்சைவாழியம்மன்

    • பூஜை செய்யும்போது, அம்மனுக்கு பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள்.
    • திருமணம் விரைவில் நடைபெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் எழுமேடு எனும் ஊரில் அமைந்துள்ளது, பச்சைவாழியம்மன் கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் அருள் பாலிக்கும் அம்மன், 'பச்சைவாழியம்மன்' என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

    புராணங்களின்படி, பச்சைப் பசேலென காட்சி அளிக்கும் வயல்வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், இங்கு வசிக்கும் மக்களையும் காப்பதற்கு ஒரு பச்சை மரத்தின் மீது அம்மன் குடியமர்ந்தார். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவரின் கனவில் வந்து அம்மன் அருளினார்.

    விடிந்ததும், இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. இதைக் கேள்விப்பட்ட மக்கள் மெய்சிலிர்த்தனர். பின்பு, அம்மனுக்கு கோவில் எழுப்பி, பச்சை நிற மேனியாக அம்மன் திருமேனியை பிரதிஷ்டை செய்தனர்.

    இந்த ஆலயத்தில் எப்போதுமே அம்மனுக்கு பச்சை நிற சேலையே அணிவிக்கிறார்கள். பக்தர்களும் காணிக்கையாக பச்சை நிற புடவையை செலுத்துகின்றனர். பச்சைவாழியம்மன் இந்த கிராமத்தின் காவல் தெய்வ விளங்குகின்றாள்.

    எனவே, பூஜை செய்யும்போது, அம்மனுக்கு பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள். இது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

    கோவில் பிரகாரத்தில் கொடிமரம், குதிரை வாகனம் மற்றும் கருப்பண்ணசாமி சன்னிதி காணப்படுகிறது. இந்த கோவிலை சுற்றியுள்ள ஊர் மக்கள், தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு முன்பாக இக்கோவிலுக்கு வந்து அம்மனின் உத்தரவை கேட்டுச் செல்கின்றனர்.

    அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை சாற்றி, செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். அப்போது, எலுமிச்சம் பழம் கீழே விழுந்தால் அந்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமணம் விரைவில் நடைபெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர், பச்சை நிற புடவை சாற்றி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    எழுமேடு பச்சைவாழியம்மன் ஆலயம், கடலூர் - பண்ருட்டி சாலையில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    Next Story
    ×