கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மார்கழி ஊஞ்சல் உற்சவம்

அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.
பகவதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்த போது எடுத்த படம்.
பகவதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்த போது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல நேற்று மார்கழி திருவாதிரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6.15 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தார்கள். ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை, தாலாட்டு நிகழ்ச்சி நடந்து.

இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com