

குரு கடாட்சம் நிறைந்த தனுசு ராசியினரே!
தனுசு ராசிக்கு பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியன் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பூர்வ புண்ணி ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் இரண்டும் வலிமை பெறுகிறது. திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும். முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள்.
மனம் பற்றற்ற நிலையை விரும்பும். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். வேலைப் பளுவினால்நேரத்திற்கு சாப்பிட முடியாது.
சமுதாயத்தில், உற்றார், உறவினர்களிடம் நல்ல வரவேற்பு, உதவிகள் கிடைக்கும்.விலகிச் சென்ற உறவுகள் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும்.
தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு , வேலை வாய்ப்புகள் கிட்டும்.
கடினமாக உழைப்பும் முயற்சியும் இருந்தால் இலக்கை, லட்சியத்தை அடைய முடியும். தாராள தன வரவால் குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பு கூடும்.திருணப் பேச்சு வார்தைகள் நல்ல முடிவிற்கு வரும்.சிலருக்கு விருப்ப விவாகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வந்து சேரும்.மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்தை குறைத்து கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சை நல்ல பலன் தரும்.
பொருளாதாரம்: அதிர்ஷ்டம் பற்றி கூறும் ஐந்தாமிடத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் மிகுதியான பொருளாசை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும்.பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பல வருடமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம்.
முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தொழிலால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும்.
பெண்கள்: வெளிநாட்டு வருமானம் வரும் அல்லது வேற்று இனத்தவரின் உதவிகள் கிடைக்கும். தன வரவில் தடையில்லாத, தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும்.நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த மாதத்தில் கிடைத்துவிடும். வராக்கடன்கள் வசூலாகும்.
தங்க நகைகள், சொத்துக்களை அடமானம் வைத்து பிழைப்பு நடத்திய நிலை முற்றிலும் மாறும்.நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். தாய் வழி உறவுகளால் அதிக நன்மையும், ஆதாயமும் உண்டாகும். மகளிர் சுய உதவிக் குழு, மாதர் சங்கம் போன்ற முக்கியமான அமைப்புகளில் உயர் பதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தகவல் தொடர்பு சாதனங்களை முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.
உத்தியோகஸ்தர்கள்: பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடலாம். சிலர் முதலாளியின் அன்பைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க நேரும்.
உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இணக்கமற்ற சூழல் மாறும். 5ல் சூரியன் நிற்பதால் அரசு அதிகாரிகள் லஞ்ச விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலையை மாற்றலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள். புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும்.
முதலீட்டாளர்கள்: வியாபாரிகள், முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும் நல்ல நேரம். சிறுதொழில், சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளாக தொழிலை உயர்த்துவீர்கள். சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு அளிக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும்.
அரசியல்வாதிகள்: 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் தனுசு ராசி அரசியல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். உங்களைச் சுற்றி எப்பொழுது தொண்டர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிக மாக இருக்கும். குரு அஷ்டம ஸ்தானத்தை நெருங்குவதால் எதிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: சனி+செவ்வாய் சேர்க்கை தனுசு ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் 2,3ம் அதிபதி சனியும் 5,12ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள்.குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி அதிகமாக சம்பாதிப்பீர்கள். பணத்தின் சுவையை அனுபவிக்கும் முன்பு சட்ட சிக்கல் வரலாம். ஒரு சிலருக்கு திடீர் பக்தி அல்லது பதவி ஆசை வரலாம். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகள் ஏற்படலாம்.
நல்லது கெட்டதை பகுத்தாயும் தன்மை மற்றும் நிதானம் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சிலருக்கு நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். பிறரின் நலத்திற்காக செய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவுகள் அதிகமாகும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும். வியாழக்கிழமை லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடுவதால் பொருளாதார மேன்மை கூடும்.
உழைக்கும் ஆர்வம் நிறைந்த மகர ராசியினரே!
ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் 4, 11ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்று உள்ளார்.தொழில், உத்தியோகத்தில் இடப் பெயர்ச்சியைத் தருவார். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடக்கும். முக்கியமான ஆவணங்களை கை மறதியாக வைத்துவிட்டு தேடுவீர்கள். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சி பலிதமாகும். அஷ்டமாதிபதி சூரியன் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சொத்துக்கள் தொடர்பான செயல்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தாயின் ஆரோக்கியத்திற்கு வைத்தியம் செய்ய வேண்டிய நேரம். போட்டி, பகை, கடன்தொல்லை, வேலை, தொழில் பாதிப்பு குறையும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சனைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காக வெளியேறலாம்.
பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். உடலில் அசதி, கை, கால் வலி அதிகமாக இருக்கும்.முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும்.அது வாழ்க்கைத் துணையாகவோ குழந்தையாகவோ இருக்கலாம்.2, 8ல் ராகு கேது நிற்பதால் சிலருக்கு திருமணத் தடை நீடிக்கும் அல்லது திருமண முயற்சியில் நேரம், காலம், பணம் போன்ற விரயங்கள் இருக்கும். சனிபகவானின் கடும் பகைவரான ராகு தசை நடப்பவர்களுக்கு ஜென்மச் சனி முடியும் வரை திருமண வாய்ப்பு குறைவு.
தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தாய்வழி சொத்து தொடர்பான விசயத்தில் தாயின் ஆதரவு சகோதர, சகோதரிகளுக்கே கிடைக்கும்.ஆனால் மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் இந்த சித்திரை மாதத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரம்: தன ஸ்தானத்தில் குரு .பார்வை பதிவதால் வட்டிக்கு வட்டி கட்டி மீளமுடியாத கடன் தொல்லையில் இருந்து மீள முடியும். நிலுவையில் உள்ள வராக்கடன்கள் வசூலாகும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம் .
வெகு சிலருக்கு அடமானத்திவிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும்.
சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வரவிற்கு இணையான செலவும் இருக்கும். விரயத்தை சுப செலவாக மாற்றுவதில் உங்களின் புத்திசாலித்தனம்.
பெண்கள்: பெண்களுக்கு இந்த மாதத்தில் நன்மைகள் அதிகமாக இருக்கும் குடும்பத்திலுள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும் . உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதை உடனே நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். சொந்த வீட்டு கனவு நிறைவேறும்
உற்றார், உறவினர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் சுப நிகழ்ச்சிகள், ஆடம்பர விருந்து உபச்சாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். தான, தர்மம் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும்
உத்தியோகஸ்தர்கள்: கடந்த சில மாதங்களாக அனுபவித்து வந்து கடன், எதிரி, நோய் தொல்லை, விரயம்,கூட்டுத் தொழில், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் காலம் வந்து விட்டது. குரு வெகு விரைவில் ஏழாமிடம் வந்து ராசியைப் பார்க்கிறார். குருப் பார்வை ராஜயோகத்தை தரப்போவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அதன் பலன் தற்போதே தெரியத் துவங்கி விடும். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உழைப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
உழைப்பிற்கான ஊதியம் கிடைக்க காலதாமதமாகும். தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. உங்கள் இயல்பான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடந்த கால நெருக்கடி நிலை மாறும். தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும்.சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடிக்காத ஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும்.
முதலீட்டாளர்கள்: தொழில்ஸ்தான அதிபதி சுக்ரன் அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.தொழில் ரீதியான பய உணர்வு, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கடுமையாக உழைக்க நேரும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும்.திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
திடீரென ஏற்றமும் எதிர்பாராத ஏமாற்றமும் தர வாய்ப்பு உள்ளது. யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. பெரிய தொழில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். கையில் பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.
அரசியல்வாதிகள்: பெயரை நிலை நிறுத்தும் வகையிலான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஆனால் கட்சியில் உங்கள் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
அரசியல் வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் சிக்கினால் உங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: சனி+செவ்வாய் சேர்க்கை ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் ராசி அதிபதி சனியும் 4,11ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள்.எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை கற்றுக்கொள்வீர்கள்.
சிலர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம். வருமான வரி, விற்பனை வரி மற்றும் தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்களை சரியாக வைத்து இருக்க வேண்டும்.வட்டி தொழில் , சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ், அடமானக் கடை , பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்தனைக்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். நெருங்கிய ரத்த பந்த உறவுகளுடன் தேவையற்ற கருத்துப் பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் வம்பு, மனச் சங்கடம் உருவாகும். சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற தான தர்மம் வழங்கவும். சித்ரா பௌர்ணமி அன்று சர்க்கரை பொங்கல் படைத்து குலதெய்வத்தை வழிபட இன்னல்கள் அகலும்.
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே!
ராசி அதிபதி சனி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப தேவைகளுக்கு மேல் உபரி வருமானம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் உறவுகளை பாசப் பிணைப்பில் கட்டுவீர்கள். சொல் வலிமை, வாக்குபலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனைக்கு உற்றார் உறவினர்கள் செவி சாய்ப்பார்கள்.
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். எந்த செயலிலும் விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம்.தைரியம், தெம்பு , ஞாபக சக்தி அதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பிரயாணங்கள் செய்ய நேரும். முறையற்ற ஆவணங்களால் வம்பு , வழக்கு , பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலர் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்வார்கள்.சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம்.கும்ப ராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது. குடும்ப ஸ்தானாதிபதி குரு பஞ்சம ஸ்தான அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுவதால் சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம். குடும்ப தேவைகள் நிறைவேறும்.
குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். விருந்து உபசாரம் மற்றும் சுப நிகழ்வுகளால் வீடு கலகலப்பாக மாறும். தவறான புரிதலால் விலகிச் சென்ற உறவுகள் உண்மை நிலை புரிந்து மீண்டும் உறவாடுவார்கள்.
வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது.மகன், மகளின் திருமணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் கை, கால், மூட்டு வலி இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வைத்தியம் நல்ல பலன் தரும்.
பொருளாதாரம்: பேச்சுத் திறமை வருமானத்தை அதிகரிக்கும். பற்றாக்குறை வருமானம் பிள்ளைகளின் பங்களிப்பால் உபரி வருமானமாகும். வீட்டில் மகாலஷ்மி வாசம் செய்வாள்.குடும்பத்திற்கு நிலையான நிரந்தமான வருமானம் கிடைக்கும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தி நாணயத்தை காப்பாற்ற இயலும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு தொகையை வங்கியில் சேமிப்பீர்கள்.இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.
அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொல்லை குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.
பெண்கள்: திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். ஆரோக்கியம் சிறப்படையும்.
மருத்துவச் செலவு குறையும்.வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள்: தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.
வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த மாதம் அமையும்.
முதலீட்டாளர்கள்: தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள்.தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள்.தொழில் போட்டியாளர்களை புறமுதுகு காட்டி ஓட வைப்பீர்கள்.
அரசியல்வாதிகள்: தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் திறமையை மேலிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்ல சந்தர்ப்பம் உருவாகும். அதை முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். இதனால் பல அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். முக்கிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகள் கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்:
சனி + செவ்வாய் சேர்க்கை ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராசி அதிபதி சனியும் 3,10ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள் சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். ஞாபக சக்தி குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம்.
அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம். உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும். தந்தைக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.அண்டை, அயலாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உங்களின் பூர்வீகம், சுய சம்பாத்திய சொத்துகளில் ஆவணங்கள் தொடர்பான குழப்பம் உங்களை கவலையில் ஆழ்த்தும்.
உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொன், பொருளை ஏமாந்து பிறருக்கு விட்டு கொடுக்கும் நிலை உருவாகலாம்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து குல இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து வர முத்தாய்ப்பான மாற்றங்கள் தேடி வரும். சனிக்கிழமைகளில் பறவை களுக்கும் பட்சிகளுக்கும் உணவிடுவதால் வறுமை கடன் தொல்லை அகலும்.
சிந்தித்து செயல்படும் மீன ராசியினரே
ராசி அதிபதி குரு பகவான் கேந்திரத்தில் நின்று கேந்திராதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுவது மிகச் சிறந்த யோகமான அமைப்பாகும். தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும் . பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும்.
உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். கடந்த கால இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.
உங்கள் தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்பங்கள் கூடி வரும். பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் யோகமுண்டாகும். முயற்சிகள் வெற்றி தரும். பணவசதி சிறப்பாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும்.
திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். வீடு வாகன யோகம் உண்டாகும்.2ம்மிடமான தனம், வாக்கு ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சூரியனும் எட்டாம் அதிபதி சுக்கிரனும் நிற்பதால் குடும்ப பிரச்சனையில் சம்பந்தமில்லாத நபர்கள் தலையிட்டு உங்களை மனசஞ்சலப்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தினால் நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். படிக்கும் பாடம் நன்கு புரியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். பேச்சுப் போட்டி, பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் ஜென்ம சனியின் காலம் என்றாலும் ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு வீடு கட்டும் பணி துரிதமடையும். குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடக்கும்.
பொருளாதாரம்: தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. சுக்கிரன் மீன லக்னத்திற்கு அஷ்டமாதிபதி என்பதால் திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். லாபம் வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும்.
மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். அதிர்ஷ்டம் தொழில், பதவி ரூபத்தில் வந்து கதவைத் தட்டும். புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும்.
பெண்கள்: பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை நீடிக்கும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம்.
உத்தியோகஸ்தர்கள்: உங்களின் உழைப்பு பணமாக காய்க்கும் நேரம். நேர்மையான வழியில் உழைப்பவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும்.ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளால் முதலாளிகளால் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும்.
அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் வீண் பழி சுமத்தப்படலாம். அவப் பெயர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சிலர் வேலைப் பளுவால் பார்க்கும் வேலையை விட்டு விடுவார்கள் அல்லது மாற்றுவார்கள்.
முதலீட்டாளர்கள்: சுய தொழிலில் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். நீண்ட காலமாக தடைபட்ட பணவு வரவு இப்பொழுது வந்து சேரும். கடன் வாங்காமலேயே உபரி வருமானத்தில் தொழிலை விரிவு படுத்துவீர்கள். சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும்.
தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கும். வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள். ஆனால் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையால் சிலர் கடன் பெறலாம்.
அரசியல்வாதிகள்: புத்திக்கூர்மையுடன் செயல்பட வேண்டும். பேச்சாற்றலால் விரும்பியதை சாதிக்க முடியும். கட்சி மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. பிற்காலத்தில் அதுவே உங்களின் முன்னேற்றத்தை தடை செய்யும்.இரண்டாம் இடத்தில் நிற்கும் அஷ்டமாதிபதி சுக்கிரன் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார்.
கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.உண்மையாக உழைப்பவர்கள் இந்த 2026 தேர்தலில் வெற்றிகரமான திருப்புமுனையை சந்திப்பீர்கள்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: சனி + செவ்வாய் சேர்க்கை. மீன ராசிக்கு 2,9ம் அதிபதி செவ்வாயும் லா பாதிபதி மற்றும் விரயாதிபதியான சனியும் ராசியில் சேர்க்கை பெறுகிறார்கள்.இந்த கால கட்டத்தில் வாக்கில் நிதானம் தேவை. உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். அலைச்சல் மிகுதியாக இருக்கும்.
பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. லெளகீக நாட்டம் குறையும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும்.
உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து ஆன்மீகப் பெரியோர்களின் நல்லா சியை பெறுவதால் நல்ல பலன் நடக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் திருச்செந்தூர் சென்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிறகு முருகனை வழிபட்டு வர நிம்மதி கூடும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406