திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா நாளை தொடங்குகிறது

தேரோட்டம் 31-ந்தேதி நடக்கிறது.இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா நாளை தொடங்குகிறது
Published on

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

பின்னர் காலை 6 மணிக்கு ஆடி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறும். மதியம் 12.05 மணிக்கு ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com