

ஆனி பவுர்ணமி பல தலங்களில் தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரம் அன்று இந்த பவுர்ணமி வருவதால் அந்த நாளில் மா, பலா, வாழை உட்பட கனிகளைப் படைத்து இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
திருச்சி உறையூரில் உள்ள ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான மாம்பழங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த மாம்பழங்கள் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
அதேபோல் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோவிலில் பக்தர்கள் வாழைப்பழத்தார்களை சமர்ப்பித்து குடும்ப வளத்திற்காக பிரார்த்தனை செய்கின்றனர். ஆனி பவுர்ணமியை முன்னிட்டு காரைக்காலில் நடைபெறும் மாங்கனி திருவிழா மிகவும் பிரபலமானது.
காரைக்கால் அம்மையாரின் பக்தி வரலாற்றை நினைவுகூரும் இந்த விழாவில், சுவாமி ஊர்வலத்தின் மீது பக்தர்கள் மாம்பழங்களை சமர்ப்பிப்பது ஒரு சிறப்பான மரபாக உள்ளது. இந்த விழாவைக் காண ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் திரளுகின்றனர். அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல் புறத்தில் அமர்ந்து கொண்டு மாம்பழங்களை சூறை விடுவார்கள்.
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் அமைந்து உள்ள கள்ளழகர் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு முப்பழ உற்சவ விழா நடைபெறும். அன்று, கள்ளழகர் கோவிலின் மூலவர் சன்னதி முன்பாக மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியில் அவதரித்தார். இவர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இவரது அவதார நாள் தமிழ்நாட்டில் பல முருகன் கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.