2026 வைகாசி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
2026 வைகாசி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
Published on

மேஷ ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். மேலும் சுகாதிபதி சந்திரனுடன் இணைந்து 'சந்திர மங்கள் யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். தன ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சூரியன் சேர்க்கை பெற்றிருப்பதால் வருமானமும், வளர்ச்சியும் உயரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடியே இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.

மிதுன-சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு செல்வதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். பணியாட்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும், சகோதர உறவு பலப்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மிதுன-புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று, சொந்த வீடான மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது வெற்றிக்குரிய ஸ்தானம் என்பதால் தொட்டவை துலங்கும். வழக்குகள் இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வர். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தேக்க நிலை மாறும்.

கடக-சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்கு குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகங்களின் சேர்க்கையால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். ஏனென்றால் குரு உங்கள் ராசிக்கு தளாதிபதியாக விளங்குபவர். எனவே இந்த கிரக சேர்க்கையால் வருமானம் எவ்வளவு வந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது, திடீர் மாற்றங்களை சந்திப்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். செலவிற்கேற்ற வரவு வந்துசேரும்.

இம்மாதம் ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

ரிஷப ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன், சூரியன் ஆகிய கிரகங்களும் இணைந்துள்ளன. எனவே 'புத சுக்ர யோக'மும். 'புத ஆதித்ய யோகமும் உருவாகிறது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனுக்குடன் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் நேரம் இது.

மிதுன-சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வரும்போது தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். எதிர்பார்த்தபடி இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தலைமைப் பதவிகள் தானாக வருவதற்கான அறிகுறி தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபநிகழ்வுகள், இப்பொழுது நடைபெறும். உங்கள் வியாபாரத்தில் வி.ஐ.பி.க்கள் வாடிக்கையாளர்களாக மாறுவர்.

மிதுன-புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று, தனது சொந்த வீடான மிதுன ராசிக்குப் புதன் செல்கிறார். தனாதிபதியான புதன் தன ஸ்தானத்திற்கு வரும் போது தனவரவு தாராளமா கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். வியாபாரம் வெற்றி நடைபோடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி வரலாம். உடல்நிலை சீராகும். உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் பல நல்ல செயல்களை செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

கடக-சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கே குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரக சேர்க்கை. உங்களை பொறுத்தவரை நன்மையாகவே இருக்கும். திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் வந்துசேரும். வியாபாரம் வெற்றி நடைபோடும். கிளைத் தொழில் செய்யும் வாய்ப்பும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு, எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்பம் அகலும். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும்.

இம்மாதம் சூரிய வழிபாடு சுகத்தை வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

மிதுன ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் கவலைப்படத் தேவையில்லை. காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புனிதப் பயணம் அதிகரிக்கும். 3-ல் கேது இருப்பதால் முன்னேற்றப் பாதையில் இடையூறுகள் வந்தாலும், அதைச் சமாளித்துவிடுவீர்கள்.

மிதுன-சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு அதிகரிக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி கைகூடும். புதிய வேலைக்கு ஏற்பாடு செய்த முயற்சியும் பலன் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சமூக சேவையில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். அதன் விளைவாக பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மிதுன-புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். உடல்நலம் சீராகும். உள்ளம் உற்சாகத்தோடு இயங்கும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்சுமை குறையும். தொழில் ஸ்தானாதிபதி குரு உங்கள் ராசியிலேயே இருப்பதால், தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கிகாரம் கிடைக்கும். உங்களுக்கு தொல்லை தந்த அதிகாரிகள் மாற்றப்படுவர். புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடக-சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு அவர் குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் காரணமாக மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கிடைக்கும். புனிதப் பயணம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். நாட்டுபற்று மிக்கவர்களின் நட்பால் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். நீண்டதூரப் பயணங்கள் பலன் தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

இம்மாதம் தென்முக கடவுள் வழிபாடு நன்மையை வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

கடக ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் செவ்வாயோடு இணைந்து 'சந்திர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். எனவே மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும், தடைகள் தானாக விலகும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகுவை, குரு பகவான் பார்ப்பதால் அந்த ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய நீங்கள் எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு குரு பகவான் வந்தபிறகு, மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள்.

மிதுன-சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான சுக்ரன். விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறி உண்டு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். தர்ம காரியங்களில் ஈடுபட்டு, தன்னை யார் என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள்.

மிதுன-புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன், அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மட்டுமல்லாமல், உறவினர் மற்றும் நண்பர்களின் மூலமாகவும் விரயங்கள் வரலாம். உத்தியோகத்தில் திடீரென இடமாற்றம் ஏற்பட்டு மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் போட்டி அதிகரிக்கும். வரவு ஒரு மடங்கு வந்தால் செலவு இருமடங்கு ஆகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பாதியில் நின்ற கட்டி டப்பணி மீதியும் தொடரும். சுபச் செலவுகளைச் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.

கடக-சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசியான உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக- லாபாதி பதி, உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்துடன் குதூகலப் பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலமும் உதிரி வருமானம் வரலாம். பொதுவாக இக்காலம் குரு - சுக்ர சேர்க்கை காலம் என்பதால், எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். எனவே அதை எதிர்கொள்ள, உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வி.ஐ.பி.க்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களால் பெருமை சேரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். பொருளாதாரம் திருப்தி தரும்.

இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

X

Maalai Malar
www.maalaimalar.com