சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

அழகர்மலை உச்சியில் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹாரத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.
சோலைமலை முருகன் கோவிலில் சூரனை வதம் செய்ய மயில் வாகனத்தில் சக்திவேலுடன் வந்த முருகபெருமானை படத்தில் காணலாம்.
சோலைமலை முருகன் கோவிலில் சூரனை வதம் செய்ய மயில் வாகனத்தில் சக்திவேலுடன் வந்த முருகபெருமானை படத்தில் காணலாம்.
Published on

இந்த விழாவானது கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் தினமும் சிறப்பு அர்ச்சனை, மகா அபிஷேகமும் நடந்தது. மேலும் அன்னம், காமதேனு, யானை வாகனங்களில் சுப்பிரமணிய சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று நடந்தது. இதில் காலையில் யாகசாலை பூஜைகளும் பின்னர் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும், குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. இதில் மாலையில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சாமி வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி கஜமுக சூரன், சிங்கமுக சூரனை வேலால் சம்ஹாரம் செய்து, பின்னர் தல விருட்சமான நாவல் மரத்தடியில் பத்மா சூரனையும் முருக பெருமான் சூரசம்ஹாரம் செய்யும் காட்சி நடந்தது.


சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து அரோஹரா கோஷமிட்டு வணங்கினர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கோலாகலமாக நடந்த இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும், சுற்று வட்டாரங்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தனர்.

முன்னதாக மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com