

கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருமுன்னிலை வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலின் சுற்று வளாகத்தில் அம்பிகையின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கிய வண்ணமாக ஒரு சிறு உட்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலினுள் வீரன் ஒருவன் இடக்கையில் வில்லுடனும் வலக்கையில் உள்ள வாளால் தன் கழுத்தில் இடப்பக்கம் அவ்வாள் வெளிப்படும் காட்சியுடனும் விளங்குகின்றான்.
இச்சன்னிதியை இவ்வூரார் முத்துக்குமார சுவாமி சன்னிதியாகக் கருதி வழிபட்டு வருகின்றார்கள். இம்முத்துக்குமாரசாமி என்ற அருளாளர் 300 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிமா நகரில் அவதரித்துச் சிறந்த யோகியாக விளங்கினார். அருகில் உள்ள சேவூரில் தங்கி பல அருட்செயல்களை செய்தார். அவரை பற்றி செய்திகளை கூறும் செப்பேடு ஒன்று இன்றும் சேவூரில் உள்ளது.
அவர் பயன்படுத்திய கருவிகளும், வாளும், வழிபட்ட அம்பிகையின் சிலை இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருளாளர் முத்துக்குமாரசாமிகள் தம் இறுதிக்காலத்தில் வாளால் கழுத்தலகு பாய்ச்சி (நவ கண்ட காணிக்கையைப் போல) அம்பிகையின் திருவடி நிழலை அடைந்தார்.
அவருடைய சமாதி சேவூரில் இன்று உள்ளது. அவருடைய அருட்செயல்களால் ஊர் மக்கள் அவரை தெய்வமாக மார்கழி திங்களில் விழா எடுத்து போற்றி வழிபடுகின்றார்கள். பெருமாநல்லூரிலும் மாரியம்மன் திருவிழா தொடங்குவதற்கு முன்பு இவரிடம் பூக்கேட்டு விழா தொடங்குவது என்பது ஒரு மரபாக இருந்து வருகின்றது.
வரலாற்று ஆய்வாளர்கள் இச்சிலையின் வடிவத்தைக் கூர்ந்து ஆராய்ந்த போது, இவ்வீரன் இடக்கையில் வில்லேந்தி நிற்கும் தோற்றத்தை காணும் போது அது ஒரு யோகியின் தோற்றமாக இல்லை என்றும் இச்சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கருதுகின்றனர்.
ஒரு யோகியின் கையில் வில்லேந்தி இருப்பது பொருத்தமாக அமையவில்லை. மேலும் யோகி முத்துக்குமாரசாமி 300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் ஆவார்.
இச்சிலை பழங்குடி மக்கள் தாங்கள் பெற்ற வெற்றிக்கு காணிக்கையாக காளிதேவிக்குத் தங்கள் தலையை அறுத்துப்படைக்கும் காட்சியாகிய 'நவகண்டப்படையலாக அமைந்துள்ளது என்றும் கருதுகின்றனர்.