

எத்தனை புதிய, புதிய கோவில்கள் தோன்றுகின்றனவோ அவை அனைத்தும் புராதன ஆலய வரலாற்றுச் சின்னங்களை கண்டுபிடிக்க உதவுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்துள்ள மயிலம் முருகன் கோவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த கோவில் மயிலம் கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்திருக்கும் இந்த குன்றினை தூரத்தில் இருந்து பார்க்கும்போது, குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல அழகாக காட்சி அளிக்கிறது.
ராஜகோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோவிலை போலவே இந்த மலையையும் புனிதமாக கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.
முருக பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மனம் திருந்தி இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான்.
தவத்தில் மகிழ்ந்த முருகன் சூரபத்மனுக்கு காட்சி அளித்தார். அப்போது சூரபத்மன் “என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்! என்று முருகனிடம் வேண்டினான். மேலும் “மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும்.
தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!” என்றும் கோரிக்கை வைத்தான். அதற்கு முருக பெருமான் “எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!” என்று கூறி மறைந்தார்.
அதை தொடர்ந்து சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
இந்த கோவிலில் பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி தெய்வானையுடன் இணைந்து திருமண கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல், இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோவில்களில் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும்.
இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோவிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.