

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவில் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோவில் பாரிவள்ளல் ஆண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகில் அமைந்துள்ளதால் பாரியூர் எனப்பெயர் பெற்றது. இவ்வூருக்கு பராபுரி என்ற பெயர் அக்காலத்தில் வழங்கியதாக வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பராபுரி என்ற சொல்லே பாரியூர் என மாறிவிட்டதாக அந்நூலை எழுதிய காலடி எச்.சுப்பிரமணிய சாஸ்திரிகள் கூறியுள்ளார். பராபுரி என்ற சொல்லில் பரா என்பதற்கு போற்றுதல், வழிபடுதல் என்பதும், புரி என்ற சொல்லுக்கு கோட்டை மதில், ஊர் என்னும் பொருள்கள் உள்ளன. இவ்விரண்டையும் இணைத்து நோக்கின் வழிபடுவதற்கு உரிய கோவில் அல்லது பராவுவதற்கு உரிய ஊர் என பொருள் அமையும்.
கொங்கு நாட்டில் வாழ்ந்த கொடையாளர் பெருமைக்கு சான்றாக திகழ்ந்தவர் பாரியூரில் வாழ்ந்த கோபிசெட்டிபிள்ளான் ஆவார். இவ்வள்ளல் பெருந்தகை தம்மை நாடி வரும் இரவலருக்கு எப்பொழுதும் இல்லை என்று சொல்லாது வாரி வழங்கி சிறந்தவர். இவ்வாறு வழங்கி வழங்கி ஏழையானார். இவ்வள்ளலை நாடி புலவர் ஒருவர் வந்த போது அவருக்கு வேண்டிய பொருளை வழங்கும் நிலை இன்மையால் வருந்தி தன்னுயிரை மாய்த்து நிறுத்தி வழிபட்ட வண்ணம் புலியை எதிர்நோக்கி புதரை அடைந்தார். அங்கு புலியை காணாமல் மனம் மிக வருந்தி சோர்ந்த வேலையில் அந்த புதரில் இருந்த பொற்குவியலை கண்டார். தன் வள்ளல் தன்மை காக்கப்பட வேண்டும் என எண்ணிய அன்னையின் அருளே இப்பொற்குவியல் எனக்கருதி வியந்து போற்றி அப்பொற்குவியலை புலவருக்கும் மற்றும் எல்லோருக்கும் ஈந்து உவந்தார் என பாரியூர் அம்மனின் பெருமை பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் ஆற்றுப்படை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
சிறிய அளவில் பழமையாக இருந்த இந்த கோவில் இப்பகுதியில் வாழ்ந்த பி.எஸ்.முத்துவேலப்பர் என்னும் பெருமகனார் மற்றும் ஊர் பொதுமக்களின் முயற்சியால் கடந்த 1932-ம் ஆண்டு முதல் 1942-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் திருப்பணிகள் செய்து அழகின் பிறப்பிடமாக இந்த கோவிலை அமைத்து 22.4.1942-ல் முதன் முறையாக குடமுழுக்கு செய்வித்தனர். அதன் பின்னர் 13.11.1967-ல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு பின்னர் 1990-ம் ஆண்டு கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு 18.6.1990-ல் சிறப்பாக மீண்டும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பின்னர் கடந்து 4.6.2003-ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர் இந்த கோவிலுக்கு மீண்டும் 26.4.2023-ல் அன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
கோவில் முன்னர் 5 அடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. அம்பாள் உடன் விநாயகர், மகா முனியப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உண்டு. இக்கோவிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது. கருவறையை சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது. கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு சிங்கத்தின் வாயில் காணப்படும் பந்து வடிவிலான ஒற்றைக்கல்.
அம்மனின் பிராதன வாகனமாக சிங்கம் கருதப்படுகிறது. அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும், காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக் கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. அம்மனின் தலையில் ருத்ரன் உள்ளதாக நம்பப்படுகிறது.
இக்கோவிலில் ஸ்ரீபொன்காளியம்மன், சித்தி விநாயகர் மற்றும் 7 கன்னிமார் சிலைகளும் கானப்படுகின்றன. அது தவிர ஸ்ரீமகா முனியப்பனின் மாபெரும் சிலை ஒன்றும் காணப்படுகின்றது. இவர் குழந்தை வரம் அளிப்பதோடு அல்லாமல், பயத்திலிருந்தும், தீய சக்திகளிடத்தில் இருந்தும் மக்களை காப்பாற்றி வருவதாக நம்பப்படுகிறது. இரு சந்நிதிகளில் இருந்தும் அளிக்கப்படும் தாயத்துகள் மக்களை தீய சக்திகளிடத்தில் இருந்தும், நோய்களில் இருந்தும் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.
இவற்றை தவிர காவல் தெய்வம், பிரம்மா மற்றும் இன்னும் பல சிலைகள் காணப்படுகின்றன. இக்கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்னவி, மஹேந்த்ரி மற்றும் சாமுண்டி ஆகியோரது சிலைகளும் காணப்படுகின்றன. "சின்ன அம்மன்" என்று அழைக்கப்படும் உற்சவர் சிலையும் இங்கு உள்ளது. மேலும் அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபநீஸ்வரர் கோவில், ஆதிநாரயனபெருமாள் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில்களும் அமைந்துள்ளன.
கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும். பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்த பூ மிதிப்பர். குண்டத்திற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரிலும், சனிக்கிழமை முத்துப்பல்லக்கிலும் ஊர்வலமாக எழுந்தருள்வதே இத்திருவிழாவின் சிறப்பம்சம். மேலும் நவராத்திரி திருவிழாவின் போது 9 நாட்களும் அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சித்திரை திருவிழா மற்றும் பொங்கல் விமர்சிகையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் "வாக்கு கேட்டல்" முறையைக் கடைபிடிக்கின்றனர்.
அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்தில் இருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர். வியாழக்கிழமை நாளில் திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
கோவில் கும்பாபிசேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மேலும் தினமும் அம்பாள் தங்க தேரில் ஊர்வலம் செல்வார். மேலும் 2 மரத்தேர்கள் மற்றும் ஒரு தங்க கவசம் அம்பாளுக்கு உரித்தானது ஆகும்.