

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கில அதிகாரி சிலர் கோவையில் இருந்து இவ்வூருக்கும் சுற்றுப்பகுதிக்கும் வருகை தந்து பலநிர்வாக சீர்திருத்தங்கள் செய்து வந்ததாக அறிகின்றோம். அவ்வாறு வருகை தந்தவர்களில் ஒரு ஆங்கிலேயன் குண்டம் திருவிழாவின்போது பல அதிகாரிகளுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தான்.
மேள வாத்தியங்கள் முழங்க ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வந்த வீரமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றி கொண்டு இருந்தார்கள். அதனைப்பார்த்த ஆங்கிலேயன். "இது அறிவற்ற செயலாக இருக்கின்றது.
அம்மனை வணங்க வேண்டுமென்றால் இப்படியெல்லாம் தீயில் இறங்கியா கும்பிட வேண்டும்? இங்கு தீயை மிதித்து கொண்டு போவதை நான் நம்பவில்லை. நான் இந்த தீயின் மீது குங்கிலியத்தை கொண்டு வந்து நிறையத் தூவுகின்றேன். நெருப்பில் உருகிப்பொங்கும்.
அதன் மீது நடந்து உங்கள் பக்தியை மெய்ப்பித்து காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஆணவத்தோடு கூறினான். உடனே அவன் குங்கிலியத்தை கொண்டு வந்து குண்டத்தில் பரப்பினான். குங்கிலியம் உருகி கொதித்துப்பொங்கி நின்றது. கோவில் பூசாரி பூஜைகளை செய்தார். அப்பொழுது தீபஸ்தம்பத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு பல்லி குண்டத்தின் மீது ஊர்ந்து அம்மன் கருவறையை சென்றடைந்தது.
அதைத்தொடர்ந்து பூசாரியும், வீரமக்களும் குண்டமிறங்கினர். அப்பொழுது குண்டத்தில் மண்டியிட்டபடி ஒரு பெண் தெய்வம் குண்டம் இறங்கும் வீரமக்களின் பாதங்களைத் தனது இரண்டு கைகளையும் ஏந்தி தாங்கிக்கொண்டு இருப்பதை ஆங்கிலேயன் தனது பூதக்கண்ணாடியின் மூலம் பார்த்தான்.
அதைப்பார்த்த அவனது கண்கள் பார்வையிழந்தன. அவன் மிகவும் திகைத்து துடித்தான். அருகில் இருந்த ஊர்ப்பெருமக்கள் பலரும் காளியம்மனின் பெருமையை அவனுக்கு எடுத்துச்சொன்னார்கள்.
அதனை அறிந்த ஆங்கிலேயன் தன் செயலுக்கு பெரிதும் வருந்தினான். மற்றவர்கள் அறிவுறுத்தியபடி அம்மனை வணங்கி மன்னிப்பு வேண்டினான். பிறகு சிறிது நேரத்தில் அவனுக்கு பார்வை திரும்பியது. மகிழ்ச்சி கூத்தாடினான்.
கொண்டத்து காளியம்மனின் பேரருளை நினைத்து நெக்குருகி தன் தவறுக்கு வருந்தி காணிக்கையாக இக்கோவிலுக்காக ஆண்டு தோறும் ரூ.1500-ம், தீபம், தீ வட்டி ஆகியவற்றை எரிக்க 6 குடம் எண்ணெய்யும் நிவந்தமாக வழங்க ஆணையிட்டான். அண்மைக்காலம் வரையிலும் அரசால் இவ்வாணைப்படியான பணமும் எண்ணையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடர்பாக அனைவரும் அறிந்து கொள்ளுமாறு அந்த ஆங்கிலேயன் உருவம் சுதையினால் செய்யப்பட்டு நீலகண்ட அய்யன் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. காலப்போக்கில் அது சிதைந்து விட்டது.