search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மகன் காதல் திருமண தகராறில் சென்னை பா.ஜனதா பிரமுகர் துப்பாக்கி முனையில் கடத்தல்
    X

    மகன் காதல் திருமண தகராறில் சென்னை பா.ஜனதா பிரமுகர் துப்பாக்கி முனையில் கடத்தல்

    • கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
    • நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி என்ற டெல்லி கோபி.

    சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது விவாகரத்து வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணம் செய்து கொண்ட இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி கோபி விவகாரத்து வழக்கிற்காக புதுவைக்கு வந்தார்.

    விசாரணை முடிந்து புதுவை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் வடபழனி போலீசார் எனக்கூறி கோபியை கடத்தி சென்றனர்.

    சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே வந்தபோது காரில் அவரை தாக்கி மகன்-மருமகள் எங்கே? என கேட்டனர். மேலும் மற்றொரு காரில் இருந்து வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கோபியை மிரட்டினார். கோபி தொடர்ந்து சத்தம் போட்டதால் கானாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கோபியை கீழே இறக்கிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து கோபி கானாத்தூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் புதுவை என்பதால் அங்கு புகார் அளிக்குமாறு கானாத்தூர் போலீசார் கூறி புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை

    இதனால், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கோபி கூறியதாவது:-

    எனது மகனையும், மருமகளையும் ஆணவக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பெண்ணின் தந்தை, நண்பர் ஆகியோர் கூட்டு சதி செய்து போலீஸ் என கூறி என்னை கடத்தி சென்றனர். நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடத்தல் சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படு கின்றனர்.

    இது தொடர்பாக கோர்ட்டையும் நாட உள்ளேன். கானாத்தூரில் கடத்தல் கும்பல் என்னை விடுவித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் என்னிடம் இருக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×