Iran War | மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானை கட்டாயப்படுத்திய அமெரிக்கா... பரபரக்கும் அறிக்கை

பாகிஸ்தான் வெறும் தூதுவராக மட்டுமே செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Iran War | மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானை கட்டாயப்படுத்திய அமெரிக்கா... பரபரக்கும் அறிக்கை
Published on

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதானம் செய்பவராகத் தன்னை முன்னிறுத்த பாகிஸ்தான் முயன்றது. ஆனால், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு புதிய அறிக்கை, ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அமெரிக்காவால் வற்புறுத்தப்பட்டதாக குறிப்பிடுகிறது.

பாகிஸ்தான் ஒரு நடுநிலையான தரகராக இல்லாமல், மாறாக அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான ஒரு வசதியான வழியாகவே செயல்பட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பாகிஸ்தானின் சுதந்திரமான ராஜதந்திர நிலைப்பாடு குறித்து அது கடுமையான கேள்விகளை எழுப்புயுள்ளது.

பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்தவர்களை மேற்கோள் காட்டி ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், வாஷிங்டனின் முன்மொழிவை ஈரானிடம் முன்வைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வற்புறுத்தியதாகவும், இதன்மூலம் அந்நாடு ஒரு செயல்திறன்மிக்க நடுநிலை பங்களிப்பைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, இரு தரப்பினருக்கும் இடையில் வெறும் தூதுவராக மட்டுமே செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி ஆசிம் முனீர், டொனால்டு டிரம்ப், ஜே.டி. வான்ஸ் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்தி, முக்கிய பங்காற்றினார். மேலும், அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மத்தியஸ்த பங்களிப்பு அதன் ராஜதந்திரத் திறமையால் வரவில்லை; மாறாக, "முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட அண்டை நாடு ஒன்று அமெரிக்க ஆதரவுடனான சலுகையை வழங்கினால், ஈரான் அதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்" என்ற நம்பிக்கையின் காரணமாகவே அது நிகழ்ந்ததாக குறிப்பிடுகிறது.

பெருமை தேடும் அவசரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் சமூக ஊடக பதிவு ஒன்றில் செய்த பெரும் தவறு, அந்த ஒப்பந்தத்தில் தனக்குள்ள வரையறுக்கப்பட்ட பங்களிப்பையும் அம்பலப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் முன்முயற்சி என்று சித்தரித்த ஷரீஃப், தனது பதிவின் மேலே தவறுதலாக "வரைவு -- X குறித்த பாகிஸ்தான் பிரதமரின் செய்தி" என்ற தலைப்பை சேர்த்திருந்தார்.

போர் நிறுத்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருந்தாலும், டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். இது ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர இஸ்ரேலுக்கு வழிவகுக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com