

பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இஸ்ரேலியர்களை குடியேற்றி வருகிறது. காசா மீதான போருக்கு பிறகு இந்த ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.
மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அங்கிருந்து துரத்த பல்வேறு அடக்குமுறைகளை இஸ்ரேல் கைக்கொண்டு வருகிறது.
பாலஸ்தீனியர்களை அங்கிருந்து இடம்பெயர செய்ய பாலஸ்தீன பெண்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் குடியேறிகள் பாலியல் வன்முறையை கட்டவிழ்ப்பதாக அண்மையில் ஐநா நிபுணர்கள் அறிக்கை சுட்டிக் காட்டியது.
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களால் குழந்தைகள் கொல்லப்படுவது மற்றும் காயமடைவது அதிகரித்து வருவதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஐநா குழந்தைகள் நிதியமான யுனிசெப் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் மேற்குக்கரையில் குறைந்தது 70 பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 850க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
அங்கு வாரத்திற்குச் சராசரியாக ஒரு பாலஸ்தீனியக் குழந்தை கொல்லப்படுவதாக யுனிசெப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளில் 93% இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டுள்ளன. இது தவிர, இஸ்ரேலியக் குடியேறிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, கத்தியால் குத்துவது, அடிப்பது மற்றும் மிளகுத் தூள் தெளிப்பது போன்ற கொடூரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வீடுகள் இடிக்கப்படுவது, பள்ளிகள் மற்றும் நீர் விநியோக அமைப்புகள் மீதான தாக்குதல்கள், மருத்துவச் சேவைக்கான தடை மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாகக் குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 1,100 குழந்தைகள் உட்பட சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது 2025ஆம் ஆண்டின் மொத்த இடப்பெயர்வு எண்ணிக்கையை விட அதிகம்.
2023 அக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து மேற்குக்கரையிலும் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாலஸ்தீனிய அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை குறைந்தது 1,070 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய வீரர்கள் அல்லது குடியேறிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.