

வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை 7.2, 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் சில நொடிகள் இடைவெளியில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதில் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
குறிப்பாக கடலோர மாநிலமான லா குவைரா மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தது. அங்கு இடிந்து விழுந்த கட்டடம் ஒன்றின் அடியில் தந்தை மற்றும் மகன் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மீட்புக் குழுவினர் அதிநவீன கேமராக்கள் மற்றும் அதிர்வு கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளுக்கு அடியில் மனித நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
சரிந்து விழும் நிலையில் இருந்த இடிபாடுகளை மிகக் கவனமாக அகற்றி, சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்டனர்.
இதன்மூலம் கடந்த நிலநடுக்கம் ஏற்பட்ட புதன்கிழமை முதல் 4 நாட்களாக சுமார் 96 மணிநேரம் இடிபாடுகளுக்கு அடியில் போராடிய அவர்கள் பத்திரமாக மீட்டப்பட்ட செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
96 மணி நேரம் உணவு, தண்ணீரின்றி இருந்ததால் இருவரும் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டினாலும் , தீவிர சோர்வினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய நாள், இதே சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றொரு இடிந்த கட்டடத்திலிருந்து ஒரு பெண்ணையும், அவரது 9 மாதக் குழந்தையையும் உயிருடன் மீட்டிருந்தனர்.
அடுத்தடுத்து நடக்கும் இந்த மீட்புச் சம்பவங்கள், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதனிடையே இந்த பேரழிவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,450-ஐ கடந்துள்ளது. 3000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சர்வதேச உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த வார இறுதியில் மட்டும் இடிபாடுகளில் இருந்து 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்தாலன்றி இனி இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பவர்களை மீட்பது கடினம்.
ஏற்கனவே 4 நாட்களை கடந்தால் அவர்கள் உணவு, தண்ணீர் இன்றி காயங்களுக்கு சிகிச்சை இன்றி மீட்கபடுவதற்குள் உயிரிழக்கக்கூடும்.
மீட்பு படையினர் இதை மனதில் வைத்து கூடுமானவரை துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.