

தென் அமெரிக்க தீவு நாடான வெனிசுலாவில் நேற்று முன் தினம் மாலை, 7.1 மற்றும் 7.5 ரிக்டர் என்ற அளவில் சில நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இது, கடந்த 125 ஆண்டுகளில் வெனிசுலாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும்.
இதில் தலைநகர் காரகஸ் உட்பட பலவேறு இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் சீட்டுக் கட்டுபோல சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன.
வெனிசுலா முழுவதும் பேரிடர் கால அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இரவு பகலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 4,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தலைநகர் கராகஸுக்கு வடக்கே உள்ள கடலோரப் பகுதியான லகுயிராவில் மிகவும் அதிக சேதம் பதிவாகியுள்ளது.
தலைநகர் காரகாஸில் உள்ள சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம், நிலநடுக்கத்தால் சேதமடைந்ததைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் பெரிய ஓட்டல்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பல இடங்களில் மக்கள் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது சவாலான பணியாக மாறியுள்ளது.
மீட்பு பணியாளர்களுடன் மக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கான்கிரீட் பலகைக்கு அடியில் சிக்கியிருந்த ஒரு பெண், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
பல இடங்களில் சரியான நேரத்தில் இடிபாடுகளை அகற்றும் கனரக வாகனங்கள் வந்து சேராததால் மக்கள் கைகளில் கிடைத்த மண்வெட்டி உள்ளிட்டவற்றை வைத்து இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணைய சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இது மீட்பு பணிகளுக்கு இன்னும் சவாலாக மாறியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
சில குடும்பங்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க, மற்றவர்களோ இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
மீட்புப் பணிகளுக்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, கத்தார், பிரேசில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் உதவி வழங்க முன்வந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ விமானங்களும் நிவாரண பணிக்காக அங்கு வந்துள்ளது.
வெனிசுலா மீதான தடைகளை அக்டோபர் 23 வரை அமெரிக்கா நீக்கியுள்ளது. மேலும், 150 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடந்த ஜனவரி முதல் அமெரிக்கக் காவலில் உள்ளனர். வெனிசுலா தற்போது அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.