என் மலர்
உலகம்

கிரீன்லாந்தை வாங்குவது ஒன்றும் ஜோக் இல்லை - வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ
- எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
- இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க முன்வந்த விவகாரம் நகைச்சுவை இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய நலனாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கலாம் என்று மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்தார். தி மெக்கின் கெல்லி நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார், கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.
"இது ஒன்றும் ஜோக் இல்லை. இது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக கையகப்படுத்தும் விஷயம் இல்லை. இது நம் தேசிய நலனுக்கானது. இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி தந்திரமாக கையாள வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆர்க்டிக் பகுதி எங்கள் கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்," என்று தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதி அமெரிக்கா பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய கப்பல் போக்குவரத்து தளமாக உருவெடுக்கும். சீனா இந்த பகுதியில் தனது இருப்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என்று ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வடமேற்கு கிரீன்லாந்தில் நிரந்தர ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்-இடம் இருந்து சுதந்திரம் பெற முயற்சித்து வரும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், தங்களது தீவு விற்பனைக்கு அல்ல என்றும், மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.






