

அமரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மோதல் போராக வெடித்து மூன்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் முதல் அமைதியின் சுவடு தென்பட தொடங்கியுள்ளது
இரு நாடுகளும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நிரந்தர தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் பாகிஸ்தான், கத்தார் மத்தியஸ்தத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தலைமையிலான குழுவும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் காலிபப் தலைமையிலான குழுவும் கடந்த சனிக்கிழமை முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதில் இன்னும் 60 நாட்களில் நிரந்தர தீர்வை எட்டுவதற்கான காலக்கெடுவை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. மேலும் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது குறித்தும் தீவிரமாக பரிலீசித்து வருவதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு அமெரிக்கா, ஈரான் மீதான முந்தைய பொருளாதார தடைகளை நீக்க பரிசீலித்து வருகிறது. குறிப்பாக ஈரானுடன் மற்ற நாடுகள் வர்த்தகம் செய்ய அமெரிக்கா விதித்த தடையை நீக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்தில் தற்காலிகமாக இந்த வர்த்தக தடையை நீக்கம் செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் புளூம்பெர்க் அறிக்கையின்படி ஏற்கனவே ஈரானிய வர்த்தகர்கள் மற்றும் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிற ஆசிய சந்தைகளில் தங்கள் எண்ணெய்யை விற்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
சீனாவே தற்போது ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் கஸ்டமர் ஆகும். இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட தேவை அதிகம் உள்ள ஆசிய சந்தைகளில் தங்கள் கச்சா எண்ணெய் விற்க ஈரான் மும்முரம் காட்டி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஏற்கனவே ஏற்றுமதிக்கு தயாராக சுமார் 68 மில்லியன் பேரல்களை வைத்துக்கொண்டு ஈரானின் எண்ணெய் கப்பல்கள் கடலில் உள்ளன என Vortexa என்ற ஆய்வுக்குழு கூறுகிறது.
அவற்றில் 80 சதவீதம் இன்னும் எந்த நாட்டுக்கு அனுப்புவது என்றும் முடிவாகவில்லை, எனவே அதற்கான கஸ்டமர்களை பிடிக்க ஈரான் வர்த்தகர்கள் மும்முரம் காட்டுகின்றனர்.
குறிப்பாக இவற்றில் பல இந்தியாவுக்கு விரைவில் டெலிவரி செய்யகூறிய வகையில் அருகில் இருக்கின்றன என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தடையினால் முந்தைய காலங்களில் ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் தற்காலிக தடை நீக்கத்தால் இந்தியா, ஈரானின் எண்ணெய்யை வாங்க முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா இந்த போரினால் ஏற்கனவே எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.
ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நீக்கம் தற்காலிகமானது என்பதாலும், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதாலும் இந்தியா தயக்கம் காட்டுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.