

போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலை ஐநா சபை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்களுக்கான சட்ட உதவி மற்றும் கவுன்சிலிங் மையத்தின் உறுப்பினரான கிபாயா, "வெவ்வேறு தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்ட 75 பெண்களில் அனைவரும்க்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவை தனி நபர்கள் அல்லது தனிப்பட்ட சம்பவங்களாக இல்லாமல், நன்றாக திட்டமிடப்பட்ட சம்பவங்களாக நடந்துள்ளன" என தெரிவித்துள்ளார்.
ஐநா சிறப்புப் பிரதிநிதி ரீம் அல்சலேம், "பாலஸ்தீனப் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய திட்டமிட்ட பெரிய அளவிலான பாலியல் வன்முறைகள் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேலைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தது மிகவும் தாமதமான ஒரு நடவடிக்கையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானோன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலைக் கருப்புப் பட்டியலில் சேர்த்ததும், பாலியல் வன்முறையைப் போர்க்கருவியாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியதும் அப்பட்டமான பொய்.
எங்களையும் ஹமாஸ் பயங்கரவாதிகளையும் ஒரே பட்டியலில் வைப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சாடியுள்ளார்.
இதற்கிடையே கடந்த மாதம் வெளியான மேற்கு கரை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கையில், இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினரால் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் காரணமாகவே பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையை விட்டு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐநா சுயாதீன விசாரணையிலும் இந்த குற்றச்சாட்டுகள் அம்பலமானது.