

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேசிய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் புதிய நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும் என்று அவர் தற்போது விரும்புகிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைத்திருப்பது, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக கைவிடுவது, மற்றும் மோதலின் போது ஏற்பட்ட இழப்புகளுக்கு தெஹ்ரானுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாமல் இருப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய, ஏற்கனவே உள்ள நீண்ட நிபந்தனைகளின் பட்டியலில் இந்த நிபந்தனை தற்போது புதிதாக இணைகிறது.
ஆபிரகாம் உடன்படிக்கை என்றால் என்ன?
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.
ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இந்நாடுகள் இடையே அமைதி ஏற்பட வழி செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப்போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன.