கன்னிப் பெண்களின் மௌனம் 'சம்மதம்'.. தாலிபான் அரசு கொண்டு வந்த சர்ச்சை விதி

குழந்தை திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னிப் பெண்களின் மௌனம் 'சம்மதம்'.. தாலிபான் அரசு கொண்டு வந்த சர்ச்சை விதி
Published on

2021இல் அமெரிக்க ராணுவம் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தான் ஆட்சி பொறுப்பு தாலிபான் வசம் சென்றது.

மத அடிப்படைவாதிகளான தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலை உள்ளிட்ட உரிமைகளை பறித்து கடும் சட்டங்களை இயற்றினர்.

வீட்டை விட்டு ஆண் துணையோடு தான் வெளியே செல்ல வேண்டும் உள்ளிட்ட சட்டங்களும் உள்ளன.

இது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்தபோதும் அங்கு பெண்களுக்கு சிறைவாசம் போன்ற சூழலே நிலவுகிறது.

இந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக தாலிபான் அரசு, திருமணம், விவாகரத்து, குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக 31 விதிகள் கொண்ட புதிய குடும்பச் சட்டத்த்தை கொண்டு வந்துள்ளது.

இவற்றில் மிக சர்ச்சைக்குரிய விதி என்னவென்றால், திருமணம் செய்யவிருக்கும் ஒரு 'கன்னிப் பெண்' சம்மதம் கேட்கும்போது அமைதியாகவோ அல்லது மௌனமாகவோ இருந்தால், அது திருமணத்திற்கான சம்மதமாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

பெண்கள் வேண்டாம் என வெளிப்படையாக மறுக்கவில்லை என்றால் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாகவே கருதப்படுவார்கள்.

மேலும், மைனர் குழந்தைகள் திருமணங்களுக்குத் தாலிபான் அரசு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.

இதற்கான முழு அதிகாரமும் அந்தப் பிள்ளைகளின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மணமகன் சமூக ரீதியாகத் தகுதியானவராகவும், மணமகன் வீட்டாரால் வழங்கப்படும் வரதட்சணை மதக் கோட்பாடுகளின்படி சரியாக இருக்கும் பட்சத்தில் இந்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் 'கியார் அல்-புலூக்' என்ற சட்டக் கோட்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுவன் அல்லது சிறுமி, தான் பருவமடைந்த பிறகு தாலிபான் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் அத் திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம்.

கணவர்கள் அல்லது மனைவிகள் கொடுமைக்காரர்களாகவோ, மனநலம் குன்றியவர்களாகவோ அல்லது ஒழுக்கக்கேடானவர்களாகவோ இருப்பது நிரூபிக்கப்பட்டால் அத்திருமணங்கள் ரத்து செய்யப்படலாம்.

இத்தகைய வழக்குகளில் பிரிந்து செல்ல உத்தரவிடவோ, சிறைத்தண்டனை அல்லது இதர தண்டனைகளை வழங்கவோ நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com