உருவானது 'கரப்பான்பூச்சி அவாமி லீக்' - இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் இளைஞர்கள் கலகக்குரல்!

அதிகாரம் யாரையெல்லாம் கரப்பான் பூச்சிகளாகக் கருதுகிறதோ, அவர்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம்
உருவானது 'கரப்பான்பூச்சி அவாமி லீக்' - இந்தியாவை  தொடர்ந்து பாகிஸ்தான் இளைஞர்கள் கலகக்குரல்!
Published on

நீதிபதி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வழக்கு விசாரணை ஒன்றில், "சில இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கரப்பான் பூச்சிகள். எல்லா துறைகளிலும் ஊடுருவி அமைப்பை எதிர்க்கிறார்கள்" என பேசியிருந்தார்.

தான் அனைவரையும் சொல்லவில்லை. போலி சான்றிதழ் மூலம் துறைகளில் பணிக்கு சேரும் இளைஞர்களை தான் கூறினேன் என விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால் நாட்டின் நிலவும் வேலையின்மை, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றால் கொந்தளிப்பில் உள்ள இளைஞர்கள் தங்கள் மீதான கரப்பான்பூச்சிகள் விமர்சனத்தால் துணுக்கிற்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - CJP

இதன் வெளிப்பாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற ஒன்று நையாண்டியாக உருவானது. உருவான ஒரு சில நாட்களில் இந்த கட்சியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் இணைந்தனர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கானவர்கள் இதில் இணைந்த நிலையில் சிஜேபியை இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை பாஜகவை பின்தொடர்பவர்களை விட அதிகரித்தது.

முடக்கம்

கட்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் மற்றொரு பக்கம் உருவாக்கப்பட்டு அதில் பலர் இணைந்து வருகின்றனர்.

இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக இளைஞர்களே உருவாக்கிய கட்சி என்றும் இதன் செயல்பாடுகள் நாட்டில் நிலவும் பிரச்சனைகளை தோலுரிப்பதே என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவுக்குரல் அளித்து வருகின்றனர். சிஜேபி எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதற்கு தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

கரப்பான்பூச்சி அவாமி லீக்

இந்த சூழலில் இந்தியாவை போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரப்பான்பூச்சி அவாமி லீக் கட்சி உருவாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் பாகிஸ்தானில் இளைஞர்கள், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்ப இதை தளமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

வேலையில்லாத இளைஞர்களுக்கான ஒரு தளமாக முன்னிறுத்தப்படும் இந்த அரசியல் போக்கு, இரு நாடுகளிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கரப்பான்பூச்சி அவாமி லீக் "அதிகாரம் யாரையெல்லாம் கரப்பான் பூச்சிகளாகக் கருதுகிறதோ, அவர்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம்" என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com