

பாகிஸ்தானில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என டிரம்ப் அறிவித்தார்.
நேற்று மாலை முதல் முற்றுகை தொடங்கும் என அமெரிக்க ராணுவம் அறிவித்திருந்தது.
ஜலசந்தி வழியாக ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் 40% எண்ணெய் இறக்குமதியும், 30% இயற்கை எரிவாயு தேவையும் இந்த ஜலசந்தி வழியாகவே நடக்கிறது.
எனவே, அமெரிக்காவின் முற்றுகை சீனாவின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா அறிவித்துள்ள ஈரான் மீதான கடற்படை முற்றுகைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தனது கப்பல்களின் போக்குவரத்தில் தலையிட வேண்டாம் என்றும் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் தனது கப்பல்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜுன், ஈரானுடனான எரிசக்தி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களைச் சீனா தொடர்ந்து மதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
"எங்கள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இது எங்களின் உள்நாட்டு விவகாரம், இதில் யாரும் தலையிட வேண்டாம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே தங்கள் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள எந்த துறைமுகத்தின் பாதுகாப்புக்கும் உறுதியளிக்க முடியாது என ஈரான் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.