டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு: NASA உதவித்தொகை பெற்ற மெக்கானிக்கல் இன்ஜினீயர் கைது - யார் இந்த ஆலன்?

அந்த நபரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு: NASA உதவித்தொகை பெற்ற மெக்கானிக்கல் இன்ஜினீயர் கைது - யார் இந்த ஆலன்?
Published on

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க இரவு விருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரின் மனைவி மெலனியா, துணை அதிபர் வான்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் அங்கு புகுந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

விருந்து நிகழ்ச்சியின் போது சுமார் எட்டு முறை துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் டிரம்ப், மெலனியா ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன்போது டிரம்ப் கீழே தடுமாறி விழுந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்கள் மேஜைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டும் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நபரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் டிரம்ப் மீது நடக்கும் 3 வது கொலை முயற்சி இதுவாகும்.

இந்நிலையில் குற்றவாளி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. கோல் தாமஸ் ஆலன் (31 வயது) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் மெக்கானிக்கல் இன்ஜினியர் என தெரியவந்துள்ளது. இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆவார்.

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்றவர் அவர் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

2014ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் கோடைக்கால ஆராய்ச்சி பெல்லோஷிப் பெற்றுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள கோல் தாமஸ் ஆலன் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ஒரு உயர்கல்வி கற்ற, தொழில்நுட்ப அறிவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமும் கொண்ட நபர் ஏன் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே எப்பஸ்டீன் விவகாரத்தை முன்வைத்து ஹோட்டலுக்கு வெளியே போராட்டங்கள் நடந்த நிலையில், உள்ளே துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com