

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷிய எண்ணெய் மீதான தடை நீக்கத்தை மேலும் 30 நாட்களுக்கு (மே 16 வரை) நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கச் செலுத்தப்படும் ஒவ்வொரு டாலரும் நேரடியாக உக்ரைன் போருக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான எக்ஸ் பதிவில் ஜெலன்ஸ்கி, "ரஷியாவுக்கு எதிரான தடைகள் தொடர்ந்து தளர்த்தப்படுவது, போரிலோ அல்லது ராஜதந்திரத்திலோ நிலவும் உண்மையான சூழ்நிலையைப் பிரதிபலிக்கவில்லை. மேலும், போரைத் தொடரலாம் என்ற ரஷியத் தலைமையின் மாயையை இது தூண்டிவிடுகிறது.
இந்த வாரத்தில் மட்டும், ரஷியர்கள் நமது நகரங்கள் மற்றும் சமூகங்கள் மீது 2,360-க்கும் மேற்பட்ட டிரோன்களையும், 1,320-க்கும் மேற்பட்ட வான்வழி குண்டுகளையும், மற்றும் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளனர்.
ரஷிய எண்ணெய்க்காகச் செலுத்தப்படும் ஒவ்வொரு டாலரும் போருக்கான பணமாகும். மாஸ்கோவின் நிழல் கடற்படையைச் சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் தற்போது கடலில் உள்ளன.
அவற்றில் 12 மில்லியன் டன்களுக்கும் அதிகமான ரஷிய எண்ணெய் உள்ளது. தடைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, அதை மீண்டும் எந்தவித பின்விளைவுகளும் இன்றி விற்க முடியும். அதன் மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் – இந்த பணம் நேரடியாக உக்ரைனுக்கு எதிரான புதிய தாக்குதல்களாக மாற்றப்படுகிறது.
அதனால்தான், ரஷிய எண்ணெய்க் கப்பல்கள் துறைமுகங்களுக்கு எண்ணெய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமல், தடுத்து நிறுத்தப்படுவது முக்கியம்.
ஆக்கிரமிப்பாளரின் எண்ணெய் ஏற்றுமதி குறைய வேண்டும், மேலும் உக்ரைனின் நீண்டகாலத் தடைகள் அந்த இலக்கை நோக்கியே தொடர்ந்து செயல்படுகின்றன. நமது வீரர்கள் ஒவ்வொருவரின் துல்லியமான செயல்பாட்டிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்தப் போருக்காக ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க உதவும் அனைத்து கூட்டாளிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.