செஷல்ஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது.
Prime Minister Modi left for Delhi from Seychelles
Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ செஷல்ஸ் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று டெல்லிக்குப் புறப்பட்டார்.

செஷல்ஸ் நாட்டின் 50-வது சுதந்திர தினப் பொன்விழா கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார். மேலும், இந்தியா மற்றும் செஷல்ஸ் இடையேயான தூதரக உறவுகளின் 50-வது ஆண்டைக் குறிக்கும் விதமாகவும் இப்பயணம் அமைந்தது.

செஷல்ஸ் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் சார்பில் 'எல்ஸ்போயர்' என்ற அதிவேக ரோந்துப் படகு, 10 பயன்பாட்டு வாகனங்கள், 5 லேசர் ரேடியல் படகுகள் மற்றும் 6 ஆம்புலன்ஸ்களை அதிபர் ஹெர்மினியிடம் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (UPI), விண்வெளி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன.

செஷல்ஸ் உள்கட்டமைப்பு மற்றும் உணவுத் தேவைகளுக்காக 500 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது. செஷல்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய "முதல் இந்தியப் பிரதமர்"என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com