

பாகிஸ்தானில் மகப்பேறுக்கு பின் வெட்டி எடுக்கப்படும் ‘பிளசன்டா’வை சட்டவிரோதமாக சேகரித்து பதப்படுத்தி, முதுமையைத் தடுக்கும் ஊசி மருந்துகள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த சர்வதேசக் கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது.
பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையின்படி இந்த கடத்தல் கும்பல் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 200 கிலோ கிராம் வரை பிளசன்டாவை சேகரித்து வந்துள்ளது
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பிளசன்டா பதப்படுத்தும் மையம் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து சுமார் 500 கிலோ எடையுள்ள பிளசன்டா என சந்தேகிக்கப்படும் மனித திசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 100 கிலோ கிராம் பிளசன்டா என சந்தேகிக்கப்படும் மனித திசுக்களை கொண்ட பார்சல் வியட்நாம் நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் அதிகாரிகள் அதை கைப்பற்றி உள்ளனர்.
இக் கும்பல் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள சில மருத்துவமனைகளில் இருந்து ஒரு பிளசன்டா வெறும் 800 பாகிஸ்தானி ரூபாய்க்கு வாங்கி வந்துள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் பிளசன்டா உலர்த்தப்பட்டு, தூளாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அங்கு இதைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஆண்டி ஏஜிங் ஊசி மருந்தின் விலை சர்வதேச சந்தையில் சுமார் 7 லட்சம் பாகிஸ்தானி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்தக் கடத்தல் கும்பல் இஸ்லாமாபாத்துடன் மட்டும் நின்றுவிடாமல் லாகூர், பெஷாவர், ராவல்பிண்டி போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது.
பிளாசன்டா என்பது கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் வழங்கும் ஒரு மிக முக்கிய தற்காலிக உறுப்பாகும். பிரசவம் முடிந்தவுடன் அதன் தேவை முடிவுக்கு வந்துவிடுகிறது.
பிரசவத்திற்குப் பிறகு பிளாசன்டா என்பது தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவு ஆகும். இதை மருத்துவமனைகள் பாதுகாப்பான முறையில் மட்டுமே அழித்துச் சாம்பலாக்க வேண்டும்.
பிளாசன்டாவில் புரதம், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளதாக நம்பப்படுவதால், சில நாடுகளில் இதன் மூலம் மாத்திரைகள் மற்றும் அழகுசாதன ஊசி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இருப்பினும் இது திசுக்களை புதுப்பித்து இளமையை தக்கவைக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று.