தொடரும் மோதல் - ஸ்பெயின் பிரதிநிதிகளை வெளியேற்றிய இஸ்ரேல்!

கிரியாத் காட் பகுதி ஒருங்கிணைப்பு மையத்தில் உள்ள ஸ்பெயின் பிரதிநிதிகளை வெளியேற்ற பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு
தொடரும் மோதல் - ஸ்பெயின் பிரதிநிதிகளை வெளியேற்றிய இஸ்ரேல்!
Published on

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் - அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களை, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான விமானங்கள் தனது துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் கிரியாத் காட் பகுதியில் உள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் இருந்து ஸ்பெயின் பிரதிநிதிகளை வெளியேற்ற பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

ஸ்பெயின் அரசு தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

"இஸ்ரேல் அரசு, எங்களைத் தாக்குபவர்களுக்கு முன்னால் அமைதியாக இருக்காது. உலகின் மிகவும் தார்மீகமான இராணுவமான ஐடிஎஃப் (IDF) வீரர்களை, எங்கள் ஹீரோக்களை ஸ்பெயின் அவதூறு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் மீண்டும் மீண்டும் நிற்கத் துணிந்துள்ளதால், கிரியாத் காட்டில் உள்ள ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து ஸ்பெயினின் பிரதிநிதிகளை வெளியேற்ற நான் உத்தரவிட்டுள்ளேன்.

பயங்கரவாத அமைப்புகளை விடுத்து, இஸ்ரேல் அரசை யார் தாக்கினாலும், அவர்கள் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த விவகாரங்களில் எங்களின் பங்காளியாக இருக்க முடியாது. இந்த பாசாங்குத்தனத்தையும், விரோதப் போக்கையும் பொறுத்துக்கொள்ள நான் தயாராக இல்லை.

எங்கள் மீது அரசியல் ரீதியான போரைத் தொடுக்கும் எந்தவொரு நாடும், அதற்கான உடனடி விலையை கொடுக்காமல் நான் விடமாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலஸ்தீனத்தைத் தனி நாடாக ஸ்பெயின் அங்கீகரித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் இருந்தது. இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் ஸ்பெயின் தனது தூதரை நிரந்தரமாகத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com