

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார்.
பிரதமர் மோடி பயணித்த சிறப்பு விமானம் இந்தோனேசிய வான்வெளியில் நுழைந்த உடனேயே, அந்த நாட்டின் விமானப்படையைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாகப் பறந்து விமான நிலையம் வரை அழைத்து வந்தன.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அங்குச் சென்றுள்ள அவருக்கு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரடியாக விமான நிலையத்திற்கே வந்து உற்சாக வரவேற்பு அளித்ததார்.
இந்தோனேசிய அரசின் Protocol-படி வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க அதிபர் வரவேண்டியதில்லை. ஆனால் பிரதமர் மோடிக்காக மரபை மீதி அதிபரே நேரில் வந்து வரவேற்றது கவனம் பெற்றது.
ஜகார்த்தா விமான நிலையத்தில் இந்தோனேசியாவின் கண்கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் மிக முக்கிய நிகழ்வாக, அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
வர்த்தகம், ராணுவப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில் முதலீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அதிபர் பிரபோவோ பங்கேற்றதன் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது என முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, அதிபர் பிரபோவோவுடன் இணைந்து யோக்யகர்த்தாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் இந்துக் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
மேலும், இந்தோனேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்துப் பிரதமர் உரையாடவுள்ளார்.
இந்தோனேசியப் பயணத்தை முடித்து பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.