பதிலளிக்காமல் சென்ற மோடி.. விமர்சித்த நார்வே பத்திரிகையாளர் - பாடம் எடுத்த இந்திய தூதரகம் - நடந்தது என்ன?

உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது, ஆனால் இந்தியா 157வது இடத்தில் உள்ளது.
பதிலளிக்காமல் சென்ற மோடி.. விமர்சித்த நார்வே பத்திரிகையாளர் - பாடம் எடுத்த இந்திய தூதரகம் - நடந்தது என்ன?
Published on

வெளிநாடுகளுக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது நார்வே நாட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று பிரதமர் மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஒஸ்லோவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மோடி தனது உரையை வாசித்துவிட்டு கிளம்ப தயாராகினர்.

அப்போது நார்வேவை சேர்ந்த இளம் பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங், பிரதமர் மோடியிடம் திடீரென கேள்வி எழுப்பினார்.

அதவாது,"பிரதமர் மோடி, உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகங்களிடம் நீங்கள் ஏன் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?" என்று கேட்டார். ஆனால் மோடி அதற்கும் பதிலளிக்காமல் வெளியேறினார்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்த ஹெல்லே லிங், "உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது, ஆனால் இந்தியா 157வது இடத்தில் உள்ளது. பாலஸ்தீனம், அமீரகம் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுடன் இந்தியா பின்தங்கியுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் "அதிகாரத்தில் இருப்பவர்கள் என் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றால், நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்பேன். அதுதான் எனது வேலை. எனக்குப் பதில்கள் தேவை, வெறும் மேடைப் பேச்சுகள் மட்டும் போதாது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஓஸ்லோவில் உள்ள இந்திய தூதரக பிரதிநிதிகள் பங்கேற்கும் பத்திரிகையாளர் மாநாட்டிக்கு வரும்படி ஹெல்லே லிங்கிற்கு அழைப்பு விடுத்தது.

அழைப்பு ஏற்று அங்கு சென்ற ஹெல்லே லிங், மேற்கு நாடுகளுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜிடம், இந்தியாவில் மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து காரசாரமான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜார்ஜ், "சில அலட்சியமான தன்னார்வ அமைப்புகளின் அறிக்கைகளை வைத்து இந்தியாவை புரிந்துகொள்ள முயற்சிக்க கூடாது.

இந்தியாவில் தினம் தினம் பல முக்கிய செய்திகள் வருகின்றன. அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சில என்ஜிஓக்கள் கவனம் இன்றி தயாரித்த ஓரிரண்டு அறிக்கைகளை நம்பி நீங்கள் விமர்சிக்கிறீர்கள்" என தெரிவித்தார்.

இதனிடையே ஹெல்லே லிங் ஒரு வெளிநாட்டு உளவாளி என்றும் வெளிநாட்டு அமைப்புகளிடம் பணம் வாங்கிவிட்டு இவ்வாறு பேசுகிறார் என்றும் இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள ஹெல்லே லிங், "நான் எந்தவிதமான வெளிநாட்டு உளவாளியும் அல்ல. எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தாலும் அனுப்பப்பட்டவள் அல்ல.

இதைப் பதிவிட நேரிடும் என்று நான் நினைக்கவில்லை. இதழியல் என்பதே சில நேரங்களில் நேருக்கு நேர் கேள்வி கேட்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "உலகின் முன்னால் ஒரு பிரதமர் பதறிப்போய், கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஓடுவது இந்தியாவின் பிம்பத்திற்கு எப்படிப்பட்ட சேதம்? மறைக்க ஒன்றுமில்லை என்றால், எதற்கும் பயப்படத் தேவையில்லை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com