

உலகில் எவ்வளவுப் பெரிய வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் நாடுகளாக இருந்தாலும் சரி, அந்நாட்டின் இளம் தலைமுறையினரே அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர். அதனால் இளம் தலைமுறையினரை வழிநடத்துதல் என்பது ஒவ்வொரு நாட்டின் முக்கிய கடமையாகும்.
அந்தவகையில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது என ஐக்கிய ராச்சியம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதாவது, 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த எவரும் இங்கிலாந்தில் புகையிலைப் பொருட்களை வாங்குவதைத் தடை செய்யும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் "புகையிலை இல்லாத தலைமுறையை" உருவாக்க முடியும் என அந்நாட்டு அமைச்சர்கள் நம்புகின்றனர். ‘புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் மசோதா’வின் கீழ் 2009 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் இங்கிலாந்து முழுவதும் சட்டப்பூர்வமாக புகையிலை விற்கப்படாது.
மேலும் குழந்தைகள் இருக்கும் இடங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே சிகரெட் அல்லது வேப் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024 நவம்பர் 5 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு இரு அவைகளிலும் (House of Commons & House of Lords) நிறைவேறியது. அடுத்த வாரம் அரசரின் ஒப்புதலைப் (Royal Assent) பெற்றவுடன் சட்டமாக நடைமுறைக்கு வரும்.
இங்கிலாந்தின் பெரும்பாலான மரணங்கள் மற்றும் தீவிர நோய்களுக்கான முதன்மைக் காரணியாக விளங்கும் புகையிலைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதே இதன் நோக்கமாகும். புகைப்பிடித்தல் காரணமாக இங்கிலாந்தில் ஆண்டுக்கு 400,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் மற்றும் 64,000 பேர் இறக்கின்றனர்.
மேலும், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற புகையிலை தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக தேசிய சுகாதார சேவைக்கு £3 பில்லியன் (சுமார் 30,000 கோடி ரூபாய்) செலவாகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு £21.3 பில்லியன் முதல் £27.6 பில்லியன் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வருமுன் காப்பதே சிறந்தது. அதனை தற்போது இங்கிலாந்து அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் எப்போது இயற்றப்படும்?