ஈரானுக்காக இறங்கி வந்த டிரம்ப்.. லெபனான் - இஸ்ரேல் இடையே புதிய போர் நிறுத்தம் என அறிவிப்பு

பெய்ரூட் நகரை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்த இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டுவிட்டன.
ஈரானுக்காக இறங்கி வந்த டிரம்ப்.. லெபனான் - இஸ்ரேல் இடையே புதிய போர் நிறுத்தம் என அறிவிப்பு
Published on

லெபனான் மீது இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தாக்கி வருவதால் அமெரிக்காவுடனான போர் நிறுத்த பேச்சுவார்தையை ஈரான் நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது.

இந்த சூழலில் லெபனான் - இஸ்ரேல் இடையே புதிய போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பலனளிப்பதாக அமைந்திருந்ததாகவும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு இஸ்ரேலியப் படைகள் எதுவும் செல்லாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் பதிவில் இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர், பெய்ரூட் நகரை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்த இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களது உயர் மட்டப் பிரதிநிதிகள் மூலம் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடமும் மிகச் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் பலனாக, அனைத்து விதமான துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

எனவே இனி இஸ்ரேல் ராணுவம் ஹெஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தாது. அதேபோல ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது எவ்வித தாக்குதலையும் நடத்தாது என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடர, லெபனான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய போர் நிறுத்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com