வாகனத்தை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்.. காசாவில் அல் ஜசீரா பத்திரிகையாளர் படுகொலை

இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 262 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்திலேயே இதுவரை 733 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வாகனத்தை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்.. காசாவில் அல் ஜசீரா பத்திரிகையாளர் படுகொலை
Published on

காசாவில் இஸ்ரேலிய டிரோன் தாக்குதலால் அல் ஜசீரா முபாஷர் தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது வாஷா தாக்குதலில் கொல்லப்பட்டார்.

நேற்று (ஏப்ரல் 8), காசா நகரின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-ரஷீத் கடற்கரை சாலையில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முகமது வாஷா மீது இஸ்ரேலிய டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அவரது வாகனம் முழுமையாகத் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதில் அவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் அவருடன் வாகனத்தில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.

இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகவியலாளர்களை மிரட்டுவதற்கும், அவர்களது குரலை ஒடுக்குவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டு நடத்திய குற்றம் என்று அல் ஜசீரா சாடியுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் அல் ஜசீராவில் பணியாற்றி வந்த முகமது வாஷா, காசாவில் நிலவும் போர்ச் சூழலையும் மக்களின் துயரங்களையும் ஆவணப்படுத்தி வந்தார்.

பிப்ரவரி 2024-இல், காசாவில் இஸ்ரேலின் போர் உச்சத்தில் இருந்தபோது, ​​வாஷாவை ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியது.

வாஷாவுக்கும் அந்த அமைப்பிற்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அல் ஜசீரா மறுத்தது.

தற்போது அவர் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

2023 அக்டோபர் முதல் தற்போது வரை இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் மொத்தம் 262 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு மட்டும் இஸ்ரேல் சுமார் 2,000 முறைக்கும் மேலாக விதிகளை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்திலேயே இதுவரை 733 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com