

காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் மூத்த ராணுவ தளபதியான இசுதீன் அல் ஹதாத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
தகவலின்படி, வெள்ளிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் இசுதீன் அல் ஹதாத்துடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் 19 வயது மகளும் கொல்லப்பட்டனர்.
இவர்களது இறுதிச்சடங்கு மற்றும் தொழுகை சனிக்கிழமையன்று மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா சுஹதா மசூதியில் நடைபெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பணய கைதிகள் பிடித்துச் செல்லப்பட்டதற்கும் பின்னால் உள்ள முக்கிய சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்.
கடந்த 2025 மே மாதம் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசாவிற்கான ஹமாஸின் ராணுவத் தலைவராக இசுதீன் அல் ஹதாத் பொறுப்பேற்றார்.
ஹமாஸ் அமைப்பிற்குத் தேவையான ஆயுதங்களைத் தயாரிப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
குறிப்பாக, இஸ்ரேலிய டாங்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற 'யாசின் 105' ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கு பின்னால் இருந்த முக்கிய நபர் இவராவார்.
இஸ்ரேல் இவரை கொல்ல எடுத்த பல முயற்சிகளில் இருந்து இவர் தொடர்ந்து தப்பி வந்ததால், ஹமாஸ் வட்டாரத்தில் இவர் 'The Ghost' என்று அழைக்கப்பட்டார்.
இவரைப் பிடித்து கொடுப்பவருக்கு இஸ்ரேல் 7.5 லட்சம் டாலர் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய இரு வேறு வான்வழித் தாக்குதல்களில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.