

ஈரானில் நேற்றிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில், அதன் துணை ராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோரைக் கொலை செய்ததாக இஸ்ரேல் அறிவித்ததுள்ளது.
மேலும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானியும் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, லாரிஜானி ஈரானின் மிக முக்கியமான பாதுகாப்புத் தலைவராகக் கருதப்பட்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக பாசிஜ் படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்த சுலைமானி, அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டார்.
மேலும் இத்தாக்குதலில் பசிஜ் படையின் பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய தங்குமிடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த முக்கிய தலைவர்கள் இறந்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தாலும், தற்போதுவரை ஈரான் தரப்பிலிருந்து எந்த உறுதிப்படுத்தலும் செய்யப்படவில்லை.
இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு பிறகு, அலி லாரிஜானி சமூக வலைதளத்தில் ஒரு கையெழுத்துப் பிரதியை வெளியிட்டுள்ளார். இது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமா அல்லது முன்பே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த பதிவா என குழப்பம் நிலவி வருகிறது.