

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட எகிப்தின் சூயஸ் கால்வாயைப் போல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தில் இம்மசோதா விரைவில் இயற்றப்படும் எனவும், ஒரு நாட்டின் வழியாகப் பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.