

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று ஈரான் மீது அமெரிக்கா திடீரென தாக்குதல் நடத்தியது.
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்களையும், ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளைப் பதிப்பதற்கு முயன்ற படகுகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்தத் தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டன. ஈரானிய படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க துருப்புக்களைப் பாதுகாப்பதற்காக தாக்குதல்கள் நடத்தப்பட்டன என அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அமெரிக்க ராணுவம் தனது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் ஹோர்மோஸ்கான் பகுதியில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை கடுமையாக மீறி உள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் நம்பிக்கைத் துரோகம் மற்றும் நம்பகத்தன்மையின்மையின் அடையாளம் ஆகும்.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்காமல் ஈரான் அரசு விடாது. எங்களது நிலப்பரப்பைப் பாதுகாப்பதில் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம். மேலும் பதற்றம் அதிகரித்தால் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், ஈரான் புரட்சிகர காவல்படை கூறும்போது, பாரசீக வளைகுடா பகுதியில் ஈரானின் வான்வெளிக்குள் நுழைந்த அமெரிக்காவின் எம்.க்யூ-9 டிரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தினோம். மேலும் ஒரு ஆர்.கியூ-4 டிரோன் மற்றும் எப்-35 போர் விமானம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இனிமேலும் அமெரிக்கா போர்நிறுத்தத்தை மீறினால் சட்டப்பூர்வமான மற்றும் உறுதியானபதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபனான் மற்றும் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 31 பேர் பலியானார்கள் என்றும், 40 பேர் காயம் அடைந்தனர் என்றும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான தற்காலிக போர் நிறுத்தத்தில் லெபனான்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற நிபந்தனையையும் ஈரான் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.