

மத்திய கிழக்கில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றி வந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்ததையடுத்து சில கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன.
இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். இந்த கடல்வழிப் பாதை எதிரிகளுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் மட்டுமே மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்திமுழுமையாக மூடப்படவில்லை. அது எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. எங்கள் எதிரிகளுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் சொந்தமான கப்பல்களை இந்த வழியாக செல்ல அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றார்.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.