

பிரதமர் மோடி ஒருவார காலம் ஐரோப்பிய பயண நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் வைத்து 52வது ஜி7 உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜூன் 17, ஜி7 உச்சி மாநாட்டில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சர்ச்சை - சந்திப்பு
ஓமன் கடலில் இந்திய மாலுமிகள் மீது அமெரிக்க ராணுவ தாக்குதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள சுங்க வரிகள், ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்டவையும் இரு நாட்டு உறவுகளை பாதித்துள்ளன.
இந்த சூழலில், ஜூன் 17 அன்று நடைபெறும் ஆலோசனையில் இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ பசிபிக் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேசியுள்ள அமெரிக்காவின் உயர் அதிகாரிகள், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தகப் பூசல்களை தீர்க்க இந்தச் சந்திப்பு அடித்தளமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அடுத்தகட்ட வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்காக விரைவில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.