ஹார்முஸ், யுரேனியம்.. 21 மணி நேரம் பேசியும் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணங்கள் என்ன?

தனது சர்வதேச கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவிற்குப் பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டன. போரின் போது தங்களால் சாதிக்க முடியாததை ராஜதந்திரத்தின் மூலம் சாதிக்க முயன்றதாகவும் ஈரான் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஹார்முஸ், யுரேனியம்.. 21 மணி நேரம் பேசியும் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணங்கள் என்ன?
Published on

அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 7-ந்தேதி இரண்டு வார ஏற்பட்டது.

நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நேற்று பாகிஸ்தானில் நடந்தது.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கா பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வருகை தந்து 21 மணி நேரம் இரு நாடுகளுக்கும் ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வி

ஆனாலும் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை. ஜே.டி. வான்ஸ் அத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஈரான் பிரதிநிதிகளும் புறப்பட்டனர்.

பேச்சுவார்த்தையின்போது, ​​ஈரானின் 10 கோரிக்கைகளும் அமெரிக்காவின் கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தை தோல்விக்கு அமெரிக்கா முன்வைத்த 3 முக்கிய நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

சில பிரச்சினைகளில் உடன்பாடு எட்டப்பட்டாலும் மூன்று முக்கியப் பிரச்சினைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவது, அணு ஆயுதங்கள் மற்றும் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிடுவது ஆகியவை குறித்து உடன்பாடு எட்ட முடியவில்லை.

மேலும் லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும் கருத்து வேறுபாடு நிலவியது.

நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகச் சூழலில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது, ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் நிபந்தனைகளை மட்டுமே ஈரான் ஏற்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதற்கு அமெரிக்கக் குழு ஒரு சாக்குப்போக்கைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று ஈரானிய தூதுக்குழு கூறியதாக ஈரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

தனது சர்வதேச கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவிற்குப் பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டன. போரின் போது தங்களால் சாதிக்க முடியாததை ராஜதந்திரத்தின் மூலம் சாதிக்க முயன்றதாகவும் ஈரான் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் ஈரான் அவசரப்படவில்லை என்றும், முடிவு அமெரிக்காவின் கையில் உள்ளது என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com