

ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கையை தவிர்க்குமாறு வளைகுடா தலைவர்கள் தன்னை வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய நிலையில், அத்தகைய நடவடிக்கை எதுவும் தங்களுக்கு தெரியாது என்று அந்த நாடுகளில் சிலவற்றின் அதிகாரிகள் கூறியதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் கோரியதை அடுத்து, ஈரான் மீதான தாக்குதலை தள்ளிவைக்க முடிவு செய்ததாக டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
அவரை பொறுத்தவரை, அத்தலைவர்கள் அமெரிக்காவிடம் "தற்போது தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியதுடன், செவ்வாயன்று திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் கூறிய தாக்குதலை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
"ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை!" என்பதை உள்ளடக்கிய "ஒரு ஒப்பந்தம் செய்யப்படும்" என்று வளைகுடா நட்பு நாடுகள் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார். கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரிடம் இருந்து இந்த கோரிக்கை வந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், அந்த வளைகுடா நாடுகளில் சிலவற்றின் அதிகாரிகள் பின்னர் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையிடம், வரவிருக்கும் எந்தவொரு அமெரிக்க ராணுவ திட்டம் குறித்தும் தங்களுக்கு "எந்தத் தகவலும் தெரியாது" என்று கூறினர்.
போர் இடைநிறுத்தத்தை அறிவித்தபோதிலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தினார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், அமெரிக்கா மற்றொரு தாக்குதலை தொடங்குவதற்கு மிக அருகில் வந்திருந்ததாகவும், பின்வாங்குவதற்கு முன்பு அதற்கு ஒப்புதல் அளிப்பதில் இருந்து "ஒரு மணி நேரம்" தொலைவில் இருந்ததாகவும் கூறினார்.
தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், சில நாட்களுக்குள் வாஷிங்டன் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
"அதாவது, இரண்டு அல்லது மூன்று நாட்கள், ஒருவேளை வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது அடுத்த வார தொடக்கத்தில் இருக்கலாம்," என்று டிரம்ப் கூறினார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் மீண்டும் வலியுறுத்தியதோடு, ஈரான் தலைவர்கள் தற்போது ஒரு ஒப்பந்தத்திற்காக 'கெஞ்சுகிறார்கள்' என்றும் கூறினார்.