

சமீபத்தில் இணையம் முழுவதையும் ஆக்கிரமித்து, காண்போரை கண்கலங்க வைத்தது பஞ்ச் எனும் குட்டி ஜப்பானிய மக்காக் குரங்கு. காரணம் குடும்பம் இருந்தும் அவர்களால் ஒதுக்கப்பட்டு, தனிமையில் பொம்மையோடு சுற்றிவந்தது. இதற்கு முன்பு தனிமையை தேர்ந்தெடுத்த பென்குயின் ஒன்றும் பெரிதும் பேசப்பட்டது.
இதையெல்லாம் கவனித்த இணையவாசிகள் அதேசமயம் பஞ்ச்போலவே ஒரு பொம்மையுடன் குடும்பத்திற்காக எரிந்த கட்டடங்களுக்கு நடுவே சுற்றிவந்து ஏங்கிய குழந்தை ஒன்றின் வீடியோவை பார்க்க, பகிர மறந்துவிட்டார்கள். அதுதான் தற்போதைய உலகின் நிலை.
எங்கோ ஒரு உயிர், போரினால் செத்துமடிந்தால் நமக்கென்ன எனும் தோணியிலேயே இந்த உலகம், உலக தலைவர்கள் நகர்கின்றனர் என நினைக்க தோன்றுகிறது. அதுதான் உண்மையும்கூட.
ரஷ்யாவால் தாக்கப்பட்ட உக்ரேன் குழந்தையோ, இஸ்ரேலால் தாக்கப்பட்ட காசா குழந்தைகளோ அழும் குரல் யாருக்கும் கேட்கவில்லையா என தெரியவில்லை. சமீபத்தில்கூட அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் பள்ளி சிறுமிகள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவேளை இந்தப் போர்கள் எல்லாம் முடிவுக்கு வந்தால் இந்த உயிர்கள் திரும்புமா என்ன? எந்த ஒரு போருக்கும் ஆயுதமேந்தாத பொதுமக்கள்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியக்கூட முடியாத குழந்தைகள்தான் அதிக விலை கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அந்தவகையில் தற்போது 18 மாத குழந்தை ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன போருக்கு ஒருவிலைக் கொடுத்துள்ளது. அந்த வலிக்கு எவ்வளவு மதிப்பு என யாராலும் கணக்கிட முடியாது. அதை கண்களால் கண்ட பெற்றோரின் வலிக்கும் என்ன விலை என தெரியவில்லை.
மத்திய காசாவில் உள்ள அல்-மகாசி (Al-Maghazi) அகதிகள் முகாம் அருகே, ஒசாமா அபு நாசர் என்ற பாலஸ்தீனரைச் சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படைகள், அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவரது 18 மாதக் குழந்தையை அவர் கண்முன்னே சித்திரவதை செய்ததாகப் பாலஸ்தீனத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கரீம் அபு நஸ்ஸார் என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறு குழந்தை தனது தந்தை ஒசாமா அபு நாசருடன் வெளியே இருந்தபோது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி பாலஸ்தீன தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின்படி , கடந்த சனிக்கிழமை ஒசாமாவையும், அவரது மகனையும் இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்துள்ளது. இதில் குழந்தையை கீழே இறக்கிவிட சொல்லிவிட்டு, அருகிலுள்ள இராணுவ சோதனைச் சாவடிக்குச் செல்லுமாறு ஒசாமாவிற்கு உத்தரவிட்டுள்ளனர்.
அங்கு சென்றதும் அவரை நிர்வாணமாக்கி சோதனை செய்துள்ளனர். பின்னர், அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறுவதற்காக, அவரின் கண் முன்னே அந்தக் குழந்தையை சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சித்திரவதையின் போது, குழந்தையின் ஒரு காலில் சிகரெட்டால் சுட்டும், மற்றொரு காலில் ஆணியை இறக்கியும் ராணுவத்தினர் கொடுமைப்படுத்தியதாக அக்குழந்தையின் தாயை பேட்டி பாலஸ்தீனப் பத்திரிகையாளர் ஒசாமா அல்-கலூட் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலியக் காவலில் 10 மணி நேரம் வைக்கப்பட்ட குழந்தை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடலில் சிகரெட் சூட்டுத் தழும்புகளும், ஆணியால் ஏற்பட்ட ஆழமான காயங்களும் இருப்பதை மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளைப் பாலஸ்தீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், தந்தையான ஒசாமா அபு நசார் இன்னும் இஸ்ரேலிய காவலில் உள்ளார். அவரது இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போதுவரை இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வாய்திறக்கவில்லை.
இதைபார்த்த உலக நாடுகளும் எந்த நடவடிக்கையும் இஸ்ரேல்மேல் எடுக்கவில்லை. ஆனால் கரீம் மட்டும் இஸ்ரேலால் சித்திரவதை செய்யப்பட்ட குழந்தை கிடையாது. கிட்டத்தட்ட பாலஸ்தீனக் குழந்தைகளில் 51% பேர் இஸ்ரேலின் நிர்வாகக் காவலில் உள்ளதாக பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன.