என் மலர்tooltip icon

    உலகம்

    தாய்லாந்து பிணைக் கைதி உடல் காசாவில் மீட்பு.. இஸ்ரேல் ராணுவம் தகவல்
    X

    தாய்லாந்து பிணைக் கைதி உடல் காசாவில் மீட்பு.. இஸ்ரேல் ராணுவம் தகவல்

    • முஜாஹிதீன் பிரிகேட்ஸ் என்ற பாலஸ்தீன ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்தக் கிப்புட்ஸில் உள்ள நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா (Nattapong Pinta) என்பவரின் உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    நட்டாபாங் பின்டாவின் உடல், 'முஜாஹிதீன் பிரிகேட்ஸ்' என்ற பாலஸ்தீன ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், காசாவின் தெற்குப் பகுதியான ரஃபா நகரில் இருந்து அது மீட்கப்பட்டதாகவும் காட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்குத் தாய்லாந்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயியாகப் பணிபுரிந்த பின்டா, காசா எல்லைக்கு அருகே உள்ள 'நிர் ஓஸ் கிப்புட்ஸ்' என்ற சிறு சமூகத்தில் இருந்து கடத்தப்பட்டார். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில், இந்தக் கிப்புட்ஸில் உள்ள நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.

    நட்டாபாங் பின்டா உயிருடன் கடத்தப்பட்டதாகவும், பின்னர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட மேலும் இரண்டு இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதிகளின் உடல்களும், அதே ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. முஜாஹிதீன் பிரிகேட்ஸ் தரப்பில் இருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

    அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனர். இவர்களில் 55 பேர் இன்னும் காசாவில் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்கலாம் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கையில் காசாவில் 54,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்ததாகவும் காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×