

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் பாகிஸ்தான் கடலோரக் காவல்படை முகாம் உள்ளது. இந்த முகாம்மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று அந்த முகாம்மீது மோதி வெடிக்க வைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை அமைப்பு பொறுப்பேற்றது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு கூறியதாவது:
பலுசிஸ்தானின் ஜிவானியில் உள்ள பன்வான் கடலோரக் காவல்படை தளத்தை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கடலோர படை முகாம் முழுமையாக அழிக்கப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடந்த உடனேயே, எங்கள் அமைப்பின் போராளிகள் முகாமின்மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலைத் தொடங்கினர்.
இந்தத் தாக்குதல்களில் 30 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.
தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்பான 43 வினாடி கொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று முகாமிற்குள் நுழைவதும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீப்பிழம்பு எழுவதும் பதிவாகி உள்ளது.
ஆனால் இந்த உயிரிழப்பு விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.