

பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளில் வறுமை 7 சதவீதம் அதிகரித்து, ஏழை மக்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வப் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு 2025-26' அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டில் 21.9 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2024-25-ஆம் ஆண்டில் 28.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.7 கோடி மக்கள் புதிதாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிராமப்புறங்களே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நகரங்களில் 17.4 சதவீதமாக இருக்கும் வறுமைநிலை, கிராமப்புறங்களில் 36.2 சதவீதமாக உள்ளது. நாட்டின் வருமானப் பகிர்வில் உள்ள முரண்பாடுகளைக் காட்டும் கினி குறியீடு 28.4 இல் இருந்து 32.7 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று, தொடர்ச்சியான வெள்ளப்பெருக்குகள், பேரிடர்கள், பணவீக்கம், பணமதிப்பிழப்பு, பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை வறுமை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.